×

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே

நன்றி குங்குமம் டாக்டர்

கண் மருத்துவர் அகிலாண்ட பாரதி

எனக்குப் பெயரும் மைக்ரேன் தான்!

ஸ்வேதாவிற்கு ஏழு வயது. அவளது பெற்றோர் அயல்நாட்டில் குடி புகுந்த தமிழர்கள். ஆண்டுக்கு ஒரு முறை விடுமுறைக்காக மட்டுமே இந்தியா வருகிறது ஸ்வேதாவின் குடும்பம். சென்ற ஆண்டு என்னிடம் வந்தவர்கள், ‘‘இவளுக்கு அடிக்கடி வயிற்றுவலி வருது. எப்படியும் மாதத்துக்கு இரண்டு நாள், மூணு நாள் வலியால் துடிச்சுடுறா. ஸ்கூலுக்கும் போக முடியல. அங்கே எல்லாம் செக்கப்பும் பண்ணி பாத்துட்டு இதுவும் மைக்ரேன்ல ஒரு வகைன்னு சொல்றாங்க. ஆனா தலைவலி, கண் கோளாறு எதுவும் இல்லை. இதுவெல்லாம் கூடவா மைக்ரேன்? இந்த வயசுலயும் வருமா?” என்று கேட்டனர்.

கட்டாயம் வரலாம். வயிற்றுடன் தொடர்புடைய மைக்ரேன் (abdominal migraine) என்பது நன்றாக அறியப்பட்ட மைக்ரேன் வகைகளில் ஒன்று தான். பெரும்பாலும் ஸ்வேதா போன்ற சிறுவர்களுக்கு வருவது. மைக்ரேனின் எத்தனையோ வித்தியாசமான வகைகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் வயிற்று வலி தான் இதன் அறிகுறியாக இருக்கும். இந்த வகை வயிற்று வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பின்நாட்களில் தலைவலியும் ஏற்படலாம். சிலருக்கு முன்பு சிலகாலம் தலைவலி வந்துவிட்டுப் போயிருக்கலாம்.

இடைப்பட்ட காலத்தில் அது வயிற்று வலியாகத் தோற்றமளித்து மீண்டும் தலைவலி என்ற முதல் அறிகுறிக்குத் திரும்பக் கூடும். தூக்கமின்மை, அதிக பசி அல்லது அதிக சோர்வு, அடிக்கடி கூர்மையான வெளிச்சத்தை பார்ப்பது இவை எல்லாம் வயிற்று வலியைத் தூண்டக் கூடிய காரணிகள். வயிற்று வலியுடன் கூடவே வாந்தி, கை, கால் வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படக்கூடும்.

ஸ்வேதாவைப் போன்ற குழந்தைகளுக்கு வயிற்றுப் பகுதியில் மைக்ரேன் ஏற்படக்கூடும் என்றால் நடுத்தர வயதினர் பலருக்குத் தலை சுற்றல், மயக்கம், கை கால்களை பயன்படுத்துவதில் சிக்கல், கால்கள் தள்ளாடுவது, கைகளில் நிலையில்லாத தன்மை ஏற்படலாம். இதனை vestibular migraine என்கிறோம். ஒரு அரிய வகை மைக்ரேன் தலைவலி இருக்கிறது. அதில் தலைவலியின் போது தலைசுற்றல் போன்ற தொந்தரவுகள் இருக்காது, ஆனால் தலைவலிக்கு முன்பான (aura) நிலையில் மேலே கூறிய அனைத்து பின்மூளை பாதிப்பிற்கான அறிகுறிகளையும் காட்டும். இந்த வகையை (Migraine with brainstem aura) என்கிறோம்.

அன்வருக்கு வயது 50. சிறுவயது முதலில் இரவுப் பணி புரிபவர். கையில் நான்கு முறை மூளைக்கு சிடி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்த படங்களை வைத்திருந்தார். அனைத்தும் சராசரியாக இரண்டு அல்லது மூன்று மாத இடைவெளியில் எடுக்கப்பட்டவை. அனைத்திலும் ரிப்போர்ட் நார்மல் என்றே வந்திருந்தது. இதைப் பாருங்க என்றபடி பரிசோதனை அறிக்கைகளை என் கையில் கொடுத்தவர் ஒன்றும் பேசாமல் அமர்ந்து கொண்டார். என்ன அறிகுறிக்காக இத்தனை ஸ்கேன் எடுத்தீர்கள் என்று மீண்டும் மீண்டும் கேட்டதில் உடன் வந்து அவரது மனைவி விபரத்தைக் கூறினார். மேடம் இவருக்கு அடிக்கடி வலது பக்க கையும் காலும் வராமல் போயிடுது.

பேச்சு குழறுது. நிற்கவே தடுமாறி மயங்கி விழுந்துடுறார். இதே மாதிரி நாலஞ்சு மணி நேரம் இருக்கு. நாங்க பதறிப் போய் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம் கொஞ்ச நேரத்தில் சரி ஆயிட்டார். எல்லா செக்கப்பும் பண்ணிட்டு நல்லா இருக்குன்னு சொல்றாங்க என்ன பிரச்சனைன்னு புரியல!” என்றார் அவரது மனைவி. மேலும் சில பரிசோதனைகள் கேள்விகள் இவற்றை முடித்து விட்டு இறுதியில் நரம்பியல் மருத்துவர் கொடுத்துவிட்ட பரிந்துரைச் சீட்டைப் பார்த்தேன்.

மைக்ரேன் பிரச்சனைக்கு கொடுக்கப்படும் மருந்துகள் தான் அதில் கொடுக்கப்பட்டிருந்தன. ‘‘உங்களுக்கு வந்திருப்பது ஒரு பரம்பரை பிரச்சனையான, Familial hemiplegic migraine ஆக இருக்கலாம். பெரும்பாலும் பெற்றோரில் ஒருவருக்கு இருந்தால் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் பரம்பரையாக இல்லாமல் தனியாகவும் ஏற்படலாம். நிரந்தர பாதிப்பு எதுவும் இல்லாமல் அரை நாள், ஒரு நாள் வரை பக்கவாதம் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

பின்பு அது தானாகவே சரியாகிவிடும். எந்த மைக்ரேன் பிரச்சினைக்கும் வருவதைப் போல செயலிழப்பைத் தூண்டும் trigger factorsஐக் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக இரவு வேலையை மாற்றுங்கள். டீ, காஃபி, மது இவற்றை அறவே தவிருங்கள். நல்ல உடற்பயிற்சி மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று ஏற்கனவே நரம்பியல் நிபுணர் சொன்னவற்றை விளக்கிக் கூறினேன்.

‘‘ஒரு தலைவலி காய்ச்சல்ன்னு வந்துட்டாக் கூட சந்தோஷப்படுவேன் டாக்டர்! இது ரொம்ப பயமா இருக்கு” என்றார் அன்வர். ‘‘எப்பவுமே அக்கரைக்கு இக்கரை பச்சையா தான் தெரியும். மைக்ரேன் தலைவலி வர்றவங்க கிட்ட கேளுங்க, அந்த வலி எவ்வளவு கொடுமையானதா இருக்கும்னு சொல்லுவாங்க. அவங்க சொல்றதைக் கேட்டால் இந்த செயலிழப்பே பரவாயில்லையென்று நினைப்பீங்க” என்றேன். ‘‘சரி தான். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தானே தெரியும்” என்றார் சிரித்தபடி.

பாவனா சமீபமாக அதிகமாக உடல் எடை கூடி விட்டார். ‘‘தைராய்டு இருக்கா பாருங்க, சுகர் இருக்கா பாருங்க” என்று அவரது கணவர் அவரை அழைத்து வந்தார். கூடவே, ‘‘ஏதோ அடிக்கடி மாத்திரை சாப்பிடுறா. என்னன்னு சொல்ல மாட்டேங்கறா” என்றார். சற்று வற்புறுத்திக் கேட்ட பின் தன்னிடம் இருக்கும் மாத்திரைச் சீட்டுகளைத் தந்தார்.‌வெவ்வேறு மகளிர் சிறப்பு மருத்துவர்களிடம் சென்றிருந்த பாவனா நிறைய கர்ப்பத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வந்தார். இத்தனைக்கும் அவர் ஏற்கனவே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். ‘‘அதிகமா இரத்தப்போக்கு இருக்கா? ஏன் அடிக்கடி பீரியட்ஸ் தள்ளிப் போடுற மாதிரி மாத்திரைகள் போட்டிருக்கீங்க?” என்று கேட்டேன். வெகுவாகத் தயங்கிய பின்னரே உண்மையைக் கூறினார்.

‘‘எனக்கு பீரியட் டைம்ல தலைவலி ரொம்ப அதிகமா இருக்கும். தலையைத் தூக்கவே முடியாது. எங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. மாசாமாசம் மூணு நாள் எப்படி வேலை செய்யாமல் இருக்குறது? அதனால் ஒவ்வொரு டாக்டர்கிட்டயா போய் ஏதாவது காரணத்த சொல்லி மாத்திரை வாங்கி சாப்பிடுறேன்” என்றார் தலை குனிந்தபடி. அவருக்கு ஏற்படுவது மாதவிடாய் காலத்தில் வரும் வழக்கமான மைக்ரேனின் (Menstrual migraine) ஒரு வகையாக இருக்கலாம். பெண்களின் மாதவிடாய் சுழற்சிக்கும் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது நம் அனைவருக்கும் தெரியும்.

பூப்படைதல், குழந்தை பிறப்பு, பாலூட்டுதல், மாதவிடாய் நிறுத்தம் என்று ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் ஹார்மோன்களின் ரோலர் கோஸ்டர் பயணத்தில் தான் பயணிக்கிறாள். மாதாந்திர உதிரப்போக்கு என்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உடலில் சட்டென்று குறையும் நிலையை உணர்த்துகிறது. உடலிலிருந்து திடீரென்று ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் போவதை உடல் ஏற்றுக் கொள்ள நேரும் குழப்பத்தில் தலைவலி ஏற்படலாம். அதற்கு எளிமையான வழி நிவாரணிகள், மிதமான ஹார்மோன்கள், மனநல மருந்துகள், சத்து மாத்திரைகள் உள்ளிட்ட சில சிகிச்சைகளால் தீவிரத்தைக் குறைக்கலாம். மிகத் தீவிரமான பிரச்சனைகளுக்கு காப்பர் டி வடிவில் கர்ப்பப்பைக்குள் ஹார்மோன்களை வெளியேற்றும் Mirina போன்ற சாதனங்கள் இருக்கின்றன.

பாவனாவின் திருமணத்திற்கு முன் அவர் தன் தாய் வீட்டில் இருந்த போது அவரது உபாதை நல்லபடியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ‘‘என் பொண்ணுக்கு எப்பவுமே அந்த மூன்று நாளும் உடம்பு முடியாது. மத்த நாள்ல சுறுசுறுப்பா இருப்பா நாங்க ரெஸ்ட் எடுக்க சொல்லிடுவோம்” என்று கூறியிருக்கின்றனர். துரதிஷ்டவசமாக, ‘‘எங்களுக்கு எல்லாம் இப்படி வந்ததே இல்லையே? உனக்கு மட்டும் என்ன அதிசயமா புதுசு புதுசா நோய் வருது?” என்று புகுந்த வீட்டில் யாரோ ஒரு பெரியம்மா சொல்லிவிட, தனக்கு வந்திருப்பது பெரிய நோய், அதை மூடி மறைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.

அதன் விளைவு தான் மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதையாகப் பல கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தத் துவங்கியிருக்கிறார். அனைத்துத் தரப்பினருக்கும் நோயின் தன்மையை விளக்கிப் புரிய வைத்த பின் பாவனாவின் பிரச்சனை தீர்ந்தது. மனதளவில் அவரது குடும்பமே ஆரோக்கியம் பெற்றுவிட்டது. இத்தனை விதமாகவும் மைக்ரேன் என்ற ஒரு நோய் பரிணமிக்கக் கூடும் என்பதே இதில் நாம் கூற விரும்பும் செய்தி!

The post கண்ணைக் கட்டிக் கொள்ளாதே appeared first on Dinakaran.

Tags : Akilanda Bharti ,Shweta ,India ,
× RELATED கண்ணைக் கட்டிக் கொள்ளாதே!