×

இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள்

நன்றி குங்குமம் டாக்டர்

முதியோர் சிறப்பு மருத்துவர் வி.எஸ்.நடராஜன்

ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பருவத்தை மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதல்கட்டம், பூப்பெய்தும் வரை. அடுத்தது, குழந்தைப்பேறு அடையும் பருவம். இறுதி மாதவிடாய்க் காலம், கடைசிப் பருவம் ஆகும். மாதவிடாய் நிற்பது என்பது ஒரு நோயல்ல. அது இயற்கையின் நியதி. அதைச் சரியாகப் புரிந்துகொண்டால் அக்காலம் மிகவும் தொல்லையில்லாத காலம் என்றே கூறலாம்.

மாதவிடாய் நிற்கும் பருவத்தை மூன்று காலங்களாகப் பிரிக்கலாம்

*இறுதி மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலம்
*இறுதி மாதவிடாய்க் காலம்
*இறுதி மாதவிடாய்க்குப் பிறகு வரும் காலம்.

இறுதி மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய காலம்

மாதவிடாய் நிற்பதற்கு சுமார் 3-4 வருடங்களுக்கு முன்னரே இப்பருவம் ஆரம்பித்துவிடுகிறது. இக்காலத்தில் பெண்ணின் சினைப்பையிலிருந்து வெளிவரும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைகிறது. அதனால் சரிவர மாதவிடாய் ஏற்படுவதில்லை. அதாவது முகம் மற்றும் உடம்பிலுள்ள பல்வேறு பாகங்கள் திடீர் திடீரென்று சிவந்து, சூடு அடைந்துவிடும். இதைத் தவிர தூக்கமின்மை, தலைவலி, களைப்பு, படபடப்பு மற்றும் மயக்கம் போன்ற பல தொல்லைகள் தோன்றுவதுண்டு.

இறுதி மாதவிடாய்க் காலம்

மாதவிடாய் தொடர்ந்து 12 மாதங்களுக்கு ஏற்படாமல் இருந்தால் அவர்கள் இப்பருவத்தை அடைந்து விட்டார்கள் என்று எண்ணலாம். சராசரியாக இப்பருவம் 45 முதல் 50 வயது வரையில் ஏற்படலாம். ஆனால் சமீப காலத்தில் பலருக்கு தங்கள் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களினால் 40 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிடுகிறது.

அறிகுறிகள்

முதலில் மாதவிடாய், விட்டுவிட்டு வருதல். சில நேரங்களில் மிக அதிகமாகவும் வரலாம். உடல் சிவத்தல், வியர்த்துக் கொட்டுதல் இவைகளும் சேர்ந்துவரும். சுமார் 70 சதவிகிதப் பெண்களுக்கு இத்தொல்லைகள் வரலாம். சிலருக்கு இத்தொல்லைகள் 5 ஆண்டுகள் கூட நீடிக்கலாம். தூக்கமும் வெகுவாகப் பாதிக்கப்படும். இதனால் பகலில் மிகுதியான களைப்பு ஏற்படும். பிறப்புறுப்புகள் மற்றும் நீர்த்தரையில் அரிப்பு, வறட்சி, நீர்க்கசிவு, சிறுநீர்க்கசிவு, ரத்தக்கட்டி போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மேற்கண்ட உறுப்புகளில் கிருமிகள் மூலம் நோய்த்தொற்றும் ஏற்படலாம்.

பாலுணர்வுப் பிரச்னைகள்

மார்பகங்கள் சற்றுத் தளர்ந்து, சரிந்துவிடுகிறது. பிறப்புறுப்புகள் சுருங்குவதாலும் ஈரத்தன்மை குறைவதாலும் பாலுணர்வு குறைவதோடு உடலுறவில் நாட்டமின்மை ஏற்படுகிறது. இதைத் தவிர வேறு சில மருத்துவப் பிரச்னைகள், குடும்பப் பிரச்னைகள் மற்றும் தனித்து இருக்க முடியாத ஒரு சூழ்நிலை ஆகிய காரணங்களால் பாலுணர்வு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவர்களுக்கு உடல் மற்றும் மூட்டுக்களில் வலி தோன்றும். சிலருக்கு முழங்கால் மூட்டுத் தேய்மானம் இப்பருவத்திலேயே தொடங்கிவிடுவதும் உண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைவால் எலும்பு வலிமையிழந்து எளிதில் முறிவு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும்.

தோலின் நிறம் சற்று மாறும். வறட்சி மற்றும் சுருக்கங்கள் தோன்றும். இதனால் தோல் எளிதில் காயமடைய வாய்ப்புண்டு. இறுதி மாதவிடாய்க்குப் பிறகு வரும் காலம் மாதவிடாய் நின்று 5-10 வருடங்கள் கழித்து இப்பருவம் ஆரம்பித்துவிடும். இக்காலத்தில் எலும்பு பலவீனம் அடைதல், பிறப்புறுப்புகளில் ரத்தக்கசிவு ஏற்படுதல், கர்ப்பப்பை கீழே இறங்குதல் மற்றும் மார்பகம், கர்ப்பப்பையில் புற்றுநோய் போன்ற தொல்லைகள் வரலாம்.

இவை அனைத்தும் மாதவிடாய் நின்ற அனைத்துப் பெண்களுக்கும் வருவதில்லை. ஒரு சிலருக்கே ஏற்படுகிறது. மாதவிடாய் முழுமையாக நின்று சுமார் ஒரு வருடம் கழித்துப் பிறப்புறுப்பு சுருங்குவது, பிறப்புறுப்புகளில் கட்டி, கர்ப்பப்பை கீழே இறங்குதல் மற்றும் கர்ப்பப்பையில்
புற்றுநோய் போன்றவையே காரணங்களாக இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்

* மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உண்டாகும் தொல்லைகளுக்குப் பொதுவாகச் சிகிச்சை ஏதும் அதிகமானோருக்குத் தேவைப்படுவதில்லை.

* யோகா, தியானம், மசாஜ் மற்றும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி மூலமே பல தொல்லைகள் குறைந்துவிடும்.

* எலும்பு பலவீனம் அடைவதைத் தடுக்க, சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்ள வேண்டும். வைட்டமின் டி அதிகம் கிடைக்க குறைந்தபட்சம் காலையிலும் மாலையிலும் 30 நிமிடங்களாவது வெயிலில் நிற்க வேண்டும். வைட்டமின் டி அதிகமுள்ள பால், மீன், மீன் எண்ணெய் மற்றும் மண்ணீரல் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* உடல் பருமானாக உள்ளவர்கள் உணவுப் பத்தியம் மற்றும் உடற்பயிற்சியைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

*ஒரு சில பெண்களுக்கு மனநல மருத்துவரின் உதவியும் தேவைப்படலாம்.

* சுண்ணாம்புச் சத்து மற்றும் வைட்டமின் டி மாத்திரையைத் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

* பிறப்புறுப்புகளில் வறட்சி உள்ள பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் களிம்பை உள்ளே தடவலாம்.

* மன அமைதியைக் கொடுக்கும் மாத்திரை நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

* மனம் சார்ந்த தொல்லைகளுக்கு மனச்சோர்வுக்கான மாத்திரையைக் கொடுக்கலாம்.

* புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை கீழே இறங்குதலுக்கு, தேவைப்பட்டால் அறுவைசிகிச்சை செய்யலாம்.

ஹார்மோன் சிகிச்சை

கால்சியம் குறைபாட்டைத் தவிர்க்க சத்துள்ள புரதம் நிறைந்த உணவுகளை அவசியம் எடுத்துக் கொள்வது நல்லது. முட்டையின் வெள்ளைக்கருவைச் சாப்பிடலாம் தேவைப்படுவோர் கால்சியம் மற்றும் வைட்டமின் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம்.எலும்பு வலிமை இழத்தலை ஆரம்ப நிலையிலேயே டெக்ஸா ஸ்கேன் பரிசோதனை மூலம் கண்டறியலாம். மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் ஈஸ்ட்ரோஜன் குறைவதால், மார்பு வலி, மாரடைப்பு போன்ற இதய பிரச்னைகள் வரலாம் இவற்றைத் தவிர்க்க விறுவிறுப்பான நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அவசியம்.

நீரிழிவு மற்றும் உயர்ரத்த அழுத்தம் போன்ற தொல்லைகளும் வரலாம். ஆனால், ஆண்களைவிடப் பெண்களுக்குச் சற்று, காலம் கடந்தே வரும். இதற்கு மாதவிடாய் நிற்பது காரணமல்ல இறதி மாதவிடாய் சமயத்தில் பல பெண்களுக்கு உடல்எடை அதிகரிப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே இதைத் தடுக்க உதவும். சமச்சீரான சத்தான உணவு முக்கியம்.

அடிக்கடி மனநிலை மாற்றங்கள். மனச்சோர்வு தூக்கமின்மை ஆகிய தொல்லைகள் ஏற்படலாம். இவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு மருந்துகள் உள்ளன. மாதவிடாய் நின்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தொல்லைகள் சரியாகிவிடும். உடற்பயிற்சி, யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவையே இந்தத் தொல்லைகளை போக்க சிறந்த வழி பிறப்புறுப்பு மற்றும் நீர்த்தாரையில் அரிப்பு, வறட்சி, சிறுநீர்க்கசிவு போன்ற தொல்லைகள் ஏற்படலாம். நோய்தொற்றும் ஏற்படலாம். மகளிர் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

சிலருக்கு ஹார்மோன் குறைப்பாட்டால் அடிக்கடி சிறுநீர் வெளியேறும் தொல்லை ஏற்படலாம். ஈஸ்ட்ஹோஜன் ஹார்மோன் களிம்பைப் பிறப்புறுப்புகளில் தடவிவந்தால் தீர்வு கிடைக்கும். இறுதி மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வே அம்மாவும், பாட்டியும் இந்தக் காலகட்டத்தைக் கடந்து வந்தவர்களே காலமுறைப்படி மருத்துவப் பரிசோதனை மற்றும் தேவைக்கேற்ற சிகிச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இறுதி மாதவிடாயை ஏற்றுக் கொள்வது அவரவர்களுடைய உடல் நலத்தையும் மனப்பக்குவத்தையும் பொறுத்தே இருக்கிறது. ஆகையால் இறுதி மாதவிடாய் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு அப்பருவத்தை மகிழ்ச்சியாகக் கடக்க முயற்சிக்கலாமே.

The post இறுதி மாதவிடாயை எதிர்கொள்ளும் வழிகள் appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Natarajan ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!