×

சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்

*தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : 22744 ஏக்கரில் சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 10 டிஎம்சி தண்ணீரை இம்மாதம் இறுதி வரை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆண்டு ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து ஜூன் 16ம்தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் பகிர்ந்து திறக்கப்பட்டது.

இதன் மூலம் குறுவை சாகுபடி ஓரளவு முழுமையாக மேற்கொண்ட போதிலும் தொடர்ந்து சம்பா, தாளடி சாகுபடியை மேற்கொள்ள இயலவில்லை. இதற்கு தமிழகத்துக்குரிய தண்ணீரை திறக்க கர்நாடக அரசு மறுத்ததாலும், போதிய அளவு வடகிழக்கு காவிரி பருவமழை டெல்டா பகுதிகளில் பெய்யாததால் முழுமையான அளவு சம்பா தாளடி சாகுபடி நடைபெறவில்லை.

இந்நிலையில் மோட்டார் பம்புசெட், ஆழ்துளை கிணறு பாசனம் மூலம் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டனர். மேலும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்து நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றது. மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பது கடந்த அக்டோபர் 10ம்தேதியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீர் தேவைக்காக மட்டும் விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் விவசாயிகள் பம்புசெட், அவ்வப்போது பெய்து வந்த மழை, அருகில் ஆழ்துளை கிணறு வைத்துள்ள விவசாயிகளிடமிருந்து தண்ணீர் கடன் பெற்று ஓரளவு சம்பா, தாளடி பயிர்களை அறுவடை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். எனினும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் சம்பா தாளடி பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து சம்பா நெற்பயிரின் நிலையை அறிய அமைக்கப்பட்ட குழுக்கள் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழுக்களின் அறிக்கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும் என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டது.

இதையடுத்து விவசாயிகள் நலன் கருதி சம்பா தாளடி நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீரை கடந்த 3ம்தேதி முதல் திறந்து விட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. 2 டிஎம்சிக்கும் கூடுதலாகவே கடந்த 9 நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் படிப்படியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டு நேற்று பாசனத்திற்காக திறப்பது நிறுத்தப்பட்டது. ஆனால் குடிநீர் தேவைக்காக மட்டும் வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவ மழையை நம்பி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் திருப்பந்துருத்தி கிராமத்தில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் மேட்டூர் அணையை தொடர்ந்து திறக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

திருவையாறு திருப்பந்துருத்தி கிராமத்தில் 100 ஏக்கரில் கதிர் வராமலேயே கருகி வருகிறது. 2 டிஎம்சி திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு போதாது. மேலும் 10 டிஎம்சி தண்ணீரை திறந்தால் தான் தஞ்சாவூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். திருவையாறு திருப்பந்துருத்தி கிராமம் முதல்மடையிலேயே நெற்பயிர் கருகி வருகிறது.

இதற்கு குடமுருட்டி ஆற்றில் உடனடியாக தண்ணீரை திறந்து விட்டு கருகும் பயிர்களை காப்பாற்ற வேண்டும். எனவே 10 டிஎம்சி தண்ணீரை பிப்ரவரி மாதம் இறுதி வரை திறக்க வேண்டும்.கர்நாடக அரசிடமிருந்து 90 டிஎம்சி தண்ணீரை பெற தமிழக அரசு முழுமையாக முயற்சிக்க வேண்டும். உரிய காவிரி நீரை பெறாவிட்டால் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் மற்றும் நடப்பாண்டு குறுவை சாகுபடி மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

The post சம்பா நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : TMC ,Mettur Dam ,Tamil government ,Thanjavur ,Tamil Nadu government ,Mettur ,Cauvery Delta ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!