×
Saravana Stores

பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பு தடுப்பணை கட்டி சுத்திகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

*விவசாயிகள் கோரிக்கை

கூடலூர் : பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் வரும் திறந்வெளி வாய்க்காலில் கழிவுநீர் கலக்கும் இடத்தில் தடுப்பணை கட்டி சுத்திகரிக்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர் தேக்கடி வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ளது.

தேக்கடி ஏரியில் இருந்து இந்த ஷட்டர் பகுதி வரை ஒன்றரை கி.மீ. தூரத்தில் திறவை வாய்க்கால் உள்ளது. இந்நிலையில் குமுளி, தேக்கடி, அட்டப்பள்ளம், 1ம் மைல் பகுதிகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட லாட்ஜூகள், ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் பொது கழிவறைகள் உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆனைவச்சால் பகுதியில் உள்ள இந்த திறவை கால்வாயில் கலக்கிறது.

தமிழக பகுதிக்கு ஷட்டர் வழியாக தண்ணீர் திறக்கப்படும்போது கழிவுநீரும் கலந்து வருகிறது. இந்த தண்ணீர் விவசாயத்திற்காகவும், குடிநீருக்காவும் சப்ளை செய்யப்படுகிறது. அதில் கழிவுநீரும் கலந்து வருவதால் அதை குடிநீராக பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த தண்ணீரை, தடுப்பணை கட்டி சுத்திகரிக்க கடந்த அதிமுக ஆட்சியில் 2019ல் திட்டமிடப்பட்டது.

இதுகுறித்து கடந்த 2020ல், அப்போதைய தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏவாக இருந்த ஜக்கையன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கழிவுநீர் கலக்கும் இடத்தை ஆய்வு செய்து, கழிவுநீரை தடுப்பணை கட்டி சுத்திகரிக்க முடிவு செய்தனர். ஆனால் அதற்குப்பின், தடுப்பணை கட்டி கழிவுநீர் சுத்திகரிக்கும் திட்டம் என்ன ஆனதென்று தெரியவில்லை. எனவே ஆய்வோடு நின்றுபோன இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீரில் கழிவுநீர் கலப்பு தடுப்பணை கட்டி சுத்திகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periyaru Dam ,Tamil Nadu ,Tamil ,Dinakaran ,
× RELATED உழவர்களின் உழைப்பால் மண்ணும்...