×

பொருநை புத்தக திருவிழாவில் சிறுதானிய உணவு போட்டியில் மாணவிகள் அசத்தல்

நெல்லை : பொருநை புத்தக திருவிழாவில் நடந்த சிறுதானிய உணவு போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பார்ப்போரை ருசிக்கத்தூண்டும் விதவிதமான உணவு வகைகளை காட்சிக்கு வைத்து அசத்தினர். நெல்லை மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 7வது பொருநை புத்தத்திருவிழா நெல்லை வர்த்தக மையத்தில் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வருகிற 13ம் தேதி நிறைவு பெற உள்ள இந்த புத்தக்கண்காட்சியில் தினசரி மாணவ, மாணவிகள் உட்பட அனைவருக்கும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் நேற்று காலை நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சர்வதேச சிறுதானிய உணவு போட்டி நடந்தது. நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சிறுதானிய உணவு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் நெல்லை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணியாளர்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள், சுயஉதவிக்குழுவினர், நெல்லை மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 16 அணிகள் கலந்து கொண்டு வித விதமான சிறுதானிய உணவுகளை காட்சிப்படுத்தி இருந்தனர். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சங்கரலிங்கம், ஊட்டச்சத்து நிபுணர் நான்சி, கல்லூரி பேராசிரியர் பொன்னி ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்த சிறுதானிய உணவுத்திருவிழாவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி நாங்குநேரி வட்டார பணியாளர்கள் ராகி காரப்பணியாரத்தை சிறப்பு உணவாக காட்சிப்படுத்தி இருந்தனர். நெல்லை வட்டார பணியாளர்கள் வரகு பேரிச்சை கேக் உள்ளிட்ட பலகாரங்களையும், பாப்பாக்குடி வட்டார பணியாளர்கள் தினை அரிசி புட்டையும், மானூர் வட்டார பணியாளர்கள் சோளம் பலகாரங்களையும், பாளை வட்டார பணியாளர்கள் சாமை அரிசி உணவுகளையும் சிறப்பு உணவாக காட்சிப்படுத்தி இருந்தனர்.

பேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் நவதானிய வடைகளையும், சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கேள்வரகு இனிப்பு தோசையையும் சிறப்பு உணவாக காட்சிக்கு வைத்து அசத்தினர். சங்கர்நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் திணை அல்வா, பாளை இக்னேசியஸ் கல்லூரி மாணவிகளின் கேழ்வரகு கேக், பெருமாள்புரம் சாராள் டக்கர் கல்லூரி மாணவிகளின் வரகு உணவு வகைகள் பார்ப்போரை கவர்ந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் கேடயமும், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்குவதற்கான கூப்பன்களும் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போட்டியில் மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காட்சி படுத்திய சிறுதானியங்கள் பயன்பாடு முதல் பரிசை பெற்றது. அவர்களுக்கு ரூ.2,500 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விதவிதமான பிரியாணி

உணவுத்திருவிழாவில் மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பாளை சதக்கதுல்லா கல்லூரி மாணவ, மாணவிகள் சிறுதானியங்களில் விதவிதமான பிரியாணிகளை செய்து காட்சிக்கு வைத்து இருந்தனர். அதில் தினை பிரியாணி, வரகு பிரியாணி, சாமை பிரியாணி, குதிரைவாலி பிரியாணி உள்ளிட்ட பிரியாணி வகைகள் சிறிய தட்டுகளில் வைக்கப்பட்டு இருந்தது. நடுவர்கள் அதை ருசி பார்த்து மதிப்பெண்கள் போட்டனர்.

The post பொருநை புத்தக திருவிழாவில் சிறுதானிய உணவு போட்டியில் மாணவிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Porunai Book Festival ,Nellai ,Nellai District Administration ,Public Library Department ,South ,Book ,Borunai Book Festival ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...