×

மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்து விட்டதா?

*தாளடி சாகுபடிக்கு போதுமா தண்ணீர்

*விவசாயிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்

திருத்துறைப்பூண்டி : மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடை மடைக்கு வந்து விட்டதா? சாகுபடி பயிருக்கு தண்ணீர் போதுமா? என்று திருத்துறைப்பூண்டி பகுதியில் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் 75 ஆயிரத்து 430 எக்டேரிலும், தாளடி பருவத்தில் 69 ஆயிரத்து 353 எக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டது.

சில இடங்களில் அறுவடை பணிகளும் நடைபெற்றது. ஆனாலும் சில இடங்களில் இந்த ஆண்டு மழைப்பொழிவு குறைவின் காரணத்தாலும், மேட்டூர் அணை நீரின் அளவு இருப்பு குறைந்த காரணத்தினாலும் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்களுக்கு உரிய காலங்களில் உரிய அளவு நீர் கொடுக்க இயலாமல் போய்விட்டது. இதனால் மேட்டூர் அணையும் தவிர்க்க முடியாமல் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது.

இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழையும் தற்பொழுது முடிந்துவிட்டது. மழைப்பொழிவு ஏதும் இல்லாத நிலையிலும் மேட்டூர் அணையில் இருந்து நீர் கிடைக்காத நிலையிலும் பால் கட்டும் தருணத்தில் உள்ள தாளடி நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்க பெறாமல் உள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் 20 நாள் முதல் 60 நாள் வரை வளர்ந்துள்ள தாளாடி பயிர்கள் உள்ளது.

இன்னும் இரண்டு முறை மேட்டூர் அணை திறந்தால் மட்டுமே தாளடி பயிரை காப்பாற்ற முடியும். மேலும் தமிழகத்தின் உணவு உற்பத்தி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் டெல்டா பகுதியில் உள்ள தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்க மேட்டூர் அணை திறக்க உத்தரவிட வேண்டும் என்று எம்எல்ஏ மாரிமுத்துவிடம் விவசாயிகள், விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் போராட்டங்களையும் அறிவித்தனர்.

இந்நிலையில் சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி அளவில் தண்ணீரை திறந்துவிடுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சம்பா பயிரை பாதுகாத்திடுமாறும் விவசாயிகளை கேட்டுகொண்டுள்ளார்.அதனடிப்படையி்ல் திருவாரூர் மாவட்டத்தின் கடை மடை பகுதியான திருத்துறைப்பூண்டி வரை தற்போது காவிரி நீர் வந்துள்ளது.

இந்நிலையில் மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடை மடை பகுதிக்கு வந்து சேர்ந்து விட்டதா என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். திருத்துறைப்பூண்டி, வேளூர், கட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து காவிரி நீர் தற்போது வந்துவிட்டதா? அந்த நீர் தற்போது சாகுபடி பயிருக்கு போதுமானதா என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடம் விவரங்களை கலெக்டர் சாருஸ்ரீ கேட்டறிந்தார்.

ஆய்வின் போது டிஆர்ஓ சண்முகநாதன், வேளாண்மை துறை இணை இயக்குனர் எழுமலை, துணை இயக்குனர் லட்சுமி காந்தன் மற்றும் பொது பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர்கள் மதியழகன், சங்கர், தாசில்தார் கார்ல் மார்க்ஸ் மற்றும் பொது பணித் துறை, வேளாண்மை துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்து விட்டதா? appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Mettur dam ,Thiruthurapoondi ,Madai ,Thiruvarur District ,Collector ,Sarusree ,Tiruthurapoondi ,
× RELATED 5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே...