×

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 50 கடைகளுக்கு சீல்

*ரூ.5 லட்சம் அபராதம் வசூல்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை,காவல்துறையுடன் இணைந்து நடத்திய தொடர் ஆய்வில் தடை செய்யப்பட்ட பான் மாசாலா,புகையிலை பொருட்கள் விற்பனை செய்த சுமார் 50 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கஞ்சா மற்றும் குட்கா, போதை பாக்கு, பான்பாரக்,பான்மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி போதைப்பொருள் ஒழிப்புக்கான சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். அண்டை மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் அருகே தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.போதை பொருட்களின் தீங்கு, விளைவுகள் குறித்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தபட வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.ஆனால் நல்ல வருவாய் கிடைப்பதால், பல வியாபாரிகள் கடைகளில் தடைகளை மீறியும் விற்பனை செய்து வருகின்றனர்.

இவற்றை தடுக்க காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை காவல்துறையுடன் இணைந்து நடத்திய மாவட்டம் முழுவதும் பெட்டி கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகளில் தொடர்ச்சியாக ஆய்வு ேமற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வில் இதுவரை சுமார் 50க்கும் மேற்பட்ட வணிகர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு அந்தகடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது மட்டுமின்றி மொத்தம் ரூ.5 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக காவல்துறையுடன் இணைந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் முதல் முறை குற்றத்திற்கு 15 நாட்கள் சீல் மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம், இரண்டாம் முறை செய்தால் 30 நாட்கள் சீல் மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாம் முறை அதே குற்றத்தை செய்தால் 90 நாட்கள் சீல் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இது போன்ற புகார்களை தெரிவிக்க 93615 23197 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கும் பட்சத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே வியாபாரிகள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும், என்றார். இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவின் பேரில் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் ரோடமைன்-பி என்ற சாயம் கலந்த பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி படகு இல்ல பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மேற்கொண்ட திடீர் ஆய்வில் அப்பகுதியிலுள்ள வடமாநிலத்தவர் விற்பனைக்காக வைத்திருந்த சாயம் கலந்த பஞ்சு மிட்டாய் பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்படாத நிறமிகள் ஏற்றப்பட்ட பஞ்சு மிட்டாய்களை உண்ணும் போது குடல் புற்று நோய் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் அவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது போன்ற உணவு தொடர்பாக புகார்களை அளிக்க 94440 42322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் தொிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

The post தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 50 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Ooty ,District Food Security Department ,Dinakaran ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!