×

பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் 2024.. 20ம் தேதி வேளாண் பட்ஜெட் 2024… 22ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவு!!

சென்னை : இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். அவையில் சில நிமிடங்கள் பேசிய அவர், “சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி,” இவ்வாறு தெரிவித்தார். தமிழ்நாடு அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இதைத் தொடர்ந்து சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் ஈடுபட்டன. அதில்,”பிப்ரவரி 13,14 ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும் . பிப்ரவரி 15ம் தேதி தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலுரை வழங்கப்படும். பிப்ரவரி 19-ம் தேதி 2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. பிப்ரவரி 20ம் தேதி 2024 -25ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.பிப்.21, 22 ஆகிய தேதிகளில் 2024-25 நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான பொதுவிவாதம் நடைபெறுகிறது. பிப்.22-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவு பெறும்,”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிப்ரவரி 19ம் தேதி தமிழக பட்ஜெட் 2024.. 20ம் தேதி வேளாண் பட்ஜெட் 2024… 22ம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Governor ,R. N. Ravi ,
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்