×

கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு!

சென்னை : கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்துள்ளார். 2 நிமிடத்தில் உரையை முடித்து ஆளுநர் ஆர்.என்.ரவி தன் இருக்கையில் அமர்ந்தார். முன்னதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அரசின் உரையில் உள்ள பல்வேறு அம்சங்கள் தான் ஏற்கும் வகையில் இல்லை. தற்போதைய நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட்ட வேண்டும்” என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் பேசிய ஆளுநர் ,”சட்டப்பேரவையின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாகும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்.வாழ்க தமிழ்நாடு.. வெல்க பாரதம்.. நன்றி,” இவ்வாறு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகளை பட்டியலிட்டு சபாநாயகர் அப்பாவு உரையாற்றினார். சபாநாயகர் அப்பாவு தனது உரையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தமிழ்நாடு அரசு அடைந்துள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அரசின் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் புறக்கணிப்பு! appeared first on Dinakaran.

Tags : Governor ,Kerala ,Tamil Nadu ,Chennai ,R. N. Ravi ,Governor R. N. ,Ravi ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...