×

மதவெறியை மட்டுமே பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்

 

புவனகிரி, பிப். 12: 10 ஆண்டு கால மோடி அரசு, எந்த வளர்ச்சியும் இல்லாமல் மதவெறியை தூண்டுகிறது என பொதுக்கூட்டத்தில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறினார். கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூர் கிராமத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், வெல்லட்டும் இந்தியா தலைப்பில் எழுச்சி பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முஹம்மது அஸ்லாம் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரியாஸ்சுதீன் வரவேற்றார். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு பேசினார்.

பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளர் கலையரசன், மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் நல்லதம்பி, பரங்கிப்பேட்டை வட்டார காங்கிரஸ் தலைவர் சுந்தர்ராஜன் ஆகியோர் பேசினர். பின்னர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதரசாவும், பள்ளிவாசலும் சட்ட விரோதமாக இடித்துவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாசூல் நிலம் வகையை சேர்ந்தது இந்த பள்ளிவாசலும், மதரசாவும் அமைந்த இடம்.

இவ்வழக்கு பிப்ரவரி 14ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில், பொக்லைன் இயந்திரம் மூலம் இந்த வீடுகள், மதரசா, பள்ளி வாசலும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதை ஜனநாயக விரோத நடவடிக்கையாக பார்க்கிறோம். தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்க பாஜ அரசுக்கு விருப்பமில்லை. தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் தரக்கூடிய வரிப்பணத்தை திருப்பித் தருவது மிக மிகக் குறைவு.

10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிற மோடி அரசு, வளர்ச்சி என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் மோடியின் நண்பர் அதானியின் வளர்ச்சி மட்டும்தான். வேலை வாய்ப்பு இல்லை. வறுமையை ஒழிக்க முடியவில்லை. மதவெறியை மட்டுமே பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடத்தப்பட்டாலும், இந்தியா கூட்டணி அமோகமாக வெற்றி பெறும். இந்த அணி தமிழ்நாட்டின் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும், என்றார்.

The post மதவெறியை மட்டுமே பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் appeared first on Dinakaran.

Tags : Bhuvanagiri ,Jawahirulla ,MLA ,Modi government ,Humanist People's Party ,Pinathur ,Parangipete, Cuddalore district ,
× RELATED ஓசி சிக்கன் ரைஸ் கேட்டு மிரட்டல் பாமக நிர்வாகி கைது