×

மெட்ரோ ரயில் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

 

சென்னை, பிப்.12: மெட்ரோ ரயில் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டுமான பணிக்காக அண்ணா மேம்பாலம் மெட்ரோ ரயில் நிலையம், நுங்கம்பாக்கம் மெட்ரோ நிலையம் மற்றும் ஸ்டெர்லிங் சாலை மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நேற்று முதல் ஒருவார காலத்திற்கு போக்குவரத்து மாற்றங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேத்துப்பட்டில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காலேஜ் ரோடு, ஹாடோஸ் ரோடு, உத்தமர் காந்தி சாலை வழியாக அண்ணா மேம்பாலத்தை அடையும் வகையில் செல்லும் (ஏற்கனவே உள்ளபடி). இந்த பாதை ஒரு வழிப்பாதையாக செயல்படுத்தப்படும். இதேபோல், அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை (டாக்டர் எம்.ஜி.ஆர் சாலை) வழியாக வள்ளுவர் கோட்டம் நோக்கி சென்று தங்கள் இலக்கை அடையலாம். அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டேங்க் பண்ட் சாலையில் (இடதுபுறம்) திரும்பி நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்குச் செல்லலாம்.

வள்ளுவர் கோட்டத்திலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் வள்ளுவர் கோட்டம் சந்திப்பில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அண்ணா மேம்பாலம் அல்லது வலதுபுறம் திரும்பி திருமலைபிள்ளை ரோடு, ஜி.என். செட்டி ரோடு வழியாக அண்ணா மேம்பாலம் சென்று அடையலாம். மற்ற பிற உட்புற சாலைகள் அனைத்திலும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்து மாற்றத்திற்கு தகுந்தபடி போக்குவரத்து அனுமதிக்கப்படும். எனவே, வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Anna Flyover ,Nungambakkam ,Metro Rail ,Traffic Police ,Chennai ,Chennai Traffic Police ,Anna Membalam ,Sterling Road ,Anna Overpass ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறு சீர்...