×

கனிமொழி எம்பியின் நடவடிக்கையால் திருப்பூரில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், சேவூர் கைகாட்டி பகுதியில் தேவேந்திரன் நகர் மற்றும் விஐபி நகர் என இரு பகுதிகள் உள்ளன. இதில், தேவேந்திரன் நகர் பகுதியில் ஒரு சமூகத்தினரும், விஐபி நகர் பகுதியில் அனைத்து சமூகத்தினரும் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தேவேந்திரன் நகர் பகுதியில் இருந்து விஐபி நகர் வழியாக நியாய விலை கடை, இ-சேவை மையம் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல முடியாத வகையில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. தேவேந்திரன் நகர் பகுதி மக்கள் கடும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் சுவர் இருப்பதாக ஏற்கனவே மாவட்ட கலெக்டர், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தனர். இது தொடர்பாக வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த நாடாளுமன்ற உறுப்பினரும், திமுகவின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழியிடம் சேவூர் தேவேந்திர நகரை சேர்ந்த பெண்கள் இப்பிரச்னை தொடர்பாக கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, உடனடியாக இந்த சுவரை இடிக்க நடவடிக்கை வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் கனிமொழி கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் உடனடியாக, ஜேசிபி இயந்திரம் மூலம் சுவர் 20 அடி நீளம் இடிக்கப்பட்டது. மேலும், மீதமுள்ள சுற்றுச்சுவரும் அகற்றப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. உடனடியாக சுவரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட கனிமொழி எம்பிக்கு தேவேந்திர நகர் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

The post கனிமொழி எம்பியின் நடவடிக்கையால் திருப்பூரில் தீண்டாமை சுற்றுச்சுவர் இடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Kanimozhi MP ,Sewur Kaigatti ,Devendran Nagar ,VIP Nagar ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...