×

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 3,137 தமிழக மீனவர்கள் கைது ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்படுகின்றன. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. இதுபோல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 50க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டு உடைக்கப்பட்டு விட்டன. 2018ம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 150 படகுகள் தற்போது வரை மீட்கப்படாமல் உள்ளன.

இவற்றில் பல சேதமடைந்து கடலில் மூழ்கிய நிலையில் படகுகளுக்கான எவ்வித இழப்பீடும் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படாதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மீன்பிடி தொழில் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டு பாஜ ஆட்சியில் 3,137 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய பாஜ அரசு போதுமான அக்கறை காட்டாமல், மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடந்து கொள்வதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நேற்று ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மீனவர் அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

The post பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 3,137 தமிழக மீனவர்கள் கைது ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Modi ,DMK ,Rameswaram Rameswaram ,Rameswaram ,Union BJP government ,Sri Lankan Navy ,Bagjalasandi ,Gulf of Mannar ,Prime Minister Modi ,Union government ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...