×

தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் 1 கோடிக்கு மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை: ஜல்ஜீவன் திட்ட ஆய்வு கூட்டத்தில் பாராட்டு

சென்னை: ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் தூய்மை பாரதம் திட்டம் ஆகிய திட்டங்களில் ஒப்புதல் வழங்கப்பட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசு குடிநீர் வழங்கல் துறை செயலாளர் வினித் மகாஜன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கு வீடுதோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட, மற்றும் செயலாக்கத்தில் உள்ள திட்டங்கள் குறித்தும் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், 45 புதிய கூட்டுக் குடிநீர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கான 56 திட்டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கிய பின் கிராம சபைகளில் வைத்து உறுதி செய்வது குறித்தும், ஆலோசிக்கப்பட்டது.

ஊரகப் பகுதிகளில் தூய்மை பாரதம் திட்ட செயல்பாடுகள், திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை குறித்தும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முன்னோடி முயற்சிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஊரகப் பகுதிகளில் தனிநபர் வீடுகளில் 100% கழிப்பறைகள் கட்டுவது மற்றும் பயன்படுத்துவதற்கு மாநில அரசால் மேற்கொள்ளப்படும் உத்திகள் குறித்தும், பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தில் தேசிய அளவில் 73.98% வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 1 கோடிக்கு மேல் அதாவது 80.43% வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி தேசிய அளவில் மாநிலத்தின் சிறப்பான செயல்பாடு பாராட்டப்பட்டது. மேலும், மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ள சிறப்பான நடவடிக்கைகள் இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணம் எனவும் பாராட்டப்பட்டது.

ஒன்றிய அரசின் கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், இயக்குநர்கள், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறைஅரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர், இயக்குநர், குடிநீர் வழங்கல் துறையின் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் 1 கோடிக்கு மேலான வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை: ஜல்ஜீவன் திட்ட ஆய்வு கூட்டத்தில் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Jaljeevan ,Chennai ,Chief Secretary ,Shivdas Meena ,Union Government Water Supply Department ,Jal Jeevan movement ,Swachh Bharatham ,
× RELATED அனுமதி கோரி தமிழக அரசுக்கு கோப்புகளை...