×

உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமையை பேசி வருபவர் பிரதமர் மோடி: சென்னையில் ஜே.பி.நட்டா பேச்சு

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரையின் 200வது தொகுதி நடைபயணம் சென்னை துறைமுகம் தொகுதியில் உள்ள தங்கசாலையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா, மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜ மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் மீது அதிக பாசம் உள்ளது. உலகத்தில் எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமையை பேசி வருகிறார். தமிழகத்தை சேர்ந்த என்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரப்படுத்தியுள்ளார். அண்ணாமலை மேற்கொள்ளும் பாதையாத்திரை முழுவதும் நிறைவடைந்ததும், மக்களுக்கு பாஜ மீது முழு நம்பிக்கை வரும். நாட்டில் யார் ஊழல் செய்தாலும் இனி விடமாட்டோம். 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு பொருளாதாரத்தை 5ம் இடத்திற்கு முன்னேற்றியுள்ளோம். மிக விரைவில் மூன்றாம் இடத்திற்கு வருவோம். ஆட்டோமொபைல் துறையில் ஜப்பானை முந்தி உள்ளோம். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயனடையும் வகையில் பல திட்டங்கள் உள்ளன.

தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் மீண்டும் பாஜ ஆட்சி அமையும். இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார். நிகழ்ச்சியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், ‘‘400 தொகுதிகளில் வெற்றிபெற்று 3வது முறையாக மோடி பிரதமர் ஆவார். மோடி இன்று தமிழ் கலாசாரத்தை போற்றி வருகிறார். ராமர் கோயில் திறப்பு, வாரணாசியில் பாரதியார் இல்லம், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல், காஷ்மீர் மக்களின் தீர்வு உள்ளிட்ட பல விஷயங்களை நாட்டு மக்களுக்கு செய்து இருக்கிறார். எனவே மக்கள் மூன்றாவது முறையாக மோடியை தேர்ந்தெடுப்பார்கள்’’ என்றார். பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘‘2024ல் மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். நம் வேலை இன்னும் முடியவில்லை. இப்போது தான் ஆரம்பம். யாத்திரை செல்லும்போது வெற்றி கண்முன்னே தெரிகிறது. 234 தொகுதியில் நிறைவு பெறும் பாதயாத்திரை தமிழகத்தில் சரித்திரம் படைக்கும்’’ என்றார்.

 

The post உலகில் எங்கு சென்றாலும் தமிழர்களின் பெருமையை பேசி வருபவர் பிரதமர் மோடி: சென்னையில் ஜே.பி.நட்டா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamils ,JP Natta ,Chennai ,Tamil Nadu ,BJP ,President ,Annamalai ,En Man En Makkal ,Thangasalai ,Harbour, Chennai ,National President ,State President ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!