×

1911 ஜன.1 மின் இணைப்பு வழங்கப்பட்டதாக ரசீது ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காத உ.பி. அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்: மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காத மின்வாரிய அதிகாரிகளுக்கு மாநில தகவல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மின்வாரியங்களில் பல்வேறு வகையான குளறுபடிகள் நடப்பது வழக்கம். ஆனால் உத்தரபிரதேச மின்வாரியத்தில் நடந்த குளறுபடி சற்று விநோதமானது. உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கஜக்புரா பகுதியை சேர்ந்தவர் உமா சங்கர் யாதவ். இவரது வீட்டுக்கு 1911ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வழங்கப்பட்ட மின்இணைப்புக்கு ரூ.2.24 லட்சம் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என மின்வாரியம் ரசீது அனுப்பி இருந்தது. இதையடுத்து மின் கட்டணத்தை சரி பார்க்கும்படி அதிகாரிகளை அணுகிய யாதவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதுகுறித்து தகவல் அறியும் உரிமை ஆணையத்தை அணுகி உமா சங்கர் யாதவ் முறையிட்டார்.

இந்த விவகாரத்தில், “1911ம் ஆண்டு வாரணாசியில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? மின் கட்டணம் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டது? அப்போது ஒரு யூனிட்டுக்கான மின் கட்டணம் எவ்வளவு? எந்த நிறுவனம் மின்சாரம் வழங்கியது? உத்தரபிரதேச மின்வாரியம் அப்போது இருந்ததா?” என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தனர். தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் இந்த கேள்விகளுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் மின்வாரியம் பதிலளிக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் வேண்டுமென்றே புறக்கணித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து கண்காணிப்பு பொறியாளர் அனில் வர்மா, நிர்வாக பொறியாளர் ஆர்.கே.கவுதம், துணைப்பிரிவு அதிகாரி சர்வேஷ் யாதவ் மற்றும் துணைப்பிரிவு அதிகாரி ரவி ஆனந்த் ஆகியோரை கைது செய்து வரும் 20ம் தேதி ஆணையத்தின் முன் ஆஜர்படுத்துமாறு வாரணாசி காவல்துறையினருக்கு தகவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

The post 1911 ஜன.1 மின் இணைப்பு வழங்கப்பட்டதாக ரசீது ஆர்டிஐ கேள்விகளுக்கு பதிலளிக்காத உ.பி. அதிகாரிகளுக்கு கைது வாரண்ட்: மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UP ,State Information Commission ,Uttar Pradesh ,Uttar Pradesh Electricity Board ,RTI ,Dinakaran ,
× RELATED உபி பல்கலைக்கழக தேர்வு: ‘ஜெய்...