×

ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தனி இடத்தில் தங்கவைப்பு; பீகாரில் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?; பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு

பாட்னா: பீகாரில் நாளை நிதிஷ் குமார் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தனி இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. துணை முதல்வராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி இருந்தார். சமீபத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற நிதிஷ்குமார், சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி பீகார் சட்டசபையில் நாளை (பிப். 12) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறுகிறது.

சட்டசபையில் மொத்தமுள்ள 243 எம்எல்ஏக்களில் தனித்து ஆட்சி அமைக்க 122 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும். நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்எல்ஏக்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்எல்ஏக்கள் என மொத்தம் 127 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சிகளான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்எல்ஏக்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்எல்ஏக்கள், மா.கம்யூனிஸ்டுக்கு 2 எம்எல்ஏக்கள் என 93 எம்எல்ஏக்கள் பலமே உள்ளது. இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆளும் கட்சி வரிசையில் உள்ள எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது. அதேபோல் ராஷ்டிரிய ஜனதா தளம் எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி பாஜக இழுக்க உள்ளதாக கூறப்பட்டது. அதனால் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தங்களது எம்எல்ஏக்களை தனி இடத்தில் தங்கவைத்துள்ளன.

இந்நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களில் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்தில் பங்கேற்கவில்லை. அதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கண்ட ஐந்து பேரில் இருவரும் பீகார் மாநிலத்திற்கு வெளியில் இருப்பதாகவும், ஒருவர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், ‘நாங்கள் எங்களது விளையாட்டை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் விளையாட்டை நாங்கள்தான் முடித்து வைப்போம்’ என்றார். மேலும் பாஜக கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் நிஜன்ராம் மாஞ்சியை, இந்திய கம்யூ. தலைவர் ரகசியமாக சந்தித்தாக கூறப்படுகிறது.

ஆனால் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4 எம்எல்ஏக்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று மாஞ்சி உறுதி அளித்துள்ளார். இதனால் நிதிஷ் குமார் அரசுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா? என்பது நாளை தெரிந்துவிடும். இன்றைய நிலையில் பாட்னாவில் உள்ள தேஜஸ்வி யாதவின் இல்லத்தில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியுள்ளனர். புறநகரில் தங்கியிருக்கும் பாஜக எம்எல்ஏக்கள் இன்றிரவு பாட்னா திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா? இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

The post ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தனி இடத்தில் தங்கவைப்பு; பீகாரில் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?; பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Bihar ,Patna ,Nitish Kumar government ,United Janata Platform ,Chief Minister ,Rashtriya Janata ,Dinakaran ,
× RELATED பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி...