×

பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜே.பி.நட்டா இன்று மாலை சென்னை வருகை: ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசுகிறார்

சென்னை: பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜே.பி.நட்டா இன்று மாலை சென்னை வருகிறார். அவரை ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து பேசுகின்றனர். பாமக, தேமுதிக உள்ளிட்ட பெரிய கட்சி தலைவர்கள் சந்திப்பை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. இந்த நிலையில் அவரின் யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. சென்னையில் யாத்திரையை முடிப்பதாக இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதே நேரத்தில் சென்னை தங்க சாலையில் பாஜக பொதுக்கூட்டம் நடத்த மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய தலைவர் இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து, காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார். 6.30 மணியளவில் மின்ட் சாலையில் சிறிது தூரம் நடந்தே சென்று பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார். இரவு 7 மணிக்கு தங்கசாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். 8.10 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இரவு உணவு சாப்பிடுகிறார்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோரை சந்தித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் பெரிய கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஜே.பி.நட்டா சந்திப்பை புறக்கணித்து உள்ளனர். அது மட்டுமல்லாமல் கடந்த முறை கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சந்திப்பை புறக்கணித்துள்ளார். பாமக, தேமுதிக, புதிய தமிழகம் தலைவர்களுடன் தமிழக பாஜக தலைவர்கள் தொடர்பு கொண்டு பேச முயன்றனர். ஆனால் அதற்கு 3 கட்சிகளின் தலைவர்களும் பிடி கொடுக்கவில்லை. அவர்கள் சந்திப்பதை தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஜே.பி.நட்டா பாஜக மூத்த நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலுக்கு தமிழகத்தில் பாஜ தயாராகி வருவது, வியூகங்களை வகுப்பது, தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம், கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் இருக்கிறது என்பது தொடர்பாக கேட்டறிய உள்ளார். இதையடுத்து, இரவு 9.15 மணியளவில் கிண்டியில் உள்ள ஓட்டலில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து 9.45 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் புறப்படுகிறார்.

இதற்கிடையில் பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடந்தது. இதில் அனைத்து பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது, யாரை வேட்பாளராக நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

The post பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜே.பி.நட்டா இன்று மாலை சென்னை வருகை: ஓபிஎஸ் நேரில் சந்தித்து பேசுகிறார் appeared first on Dinakaran.

Tags : BJP ,J. B. Nata ,Chennai ,OPS ,PALAMAKA ,DEMUTIKA ,
× RELATED சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை...