×

விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வரும் 16ல் நாடு முழுவதும் ‘ஸ்டிரைக்’: பஞ்சாப், அரியானாவில் 144 தடை

புதுடெல்லி: விவசாயிகள் சங்கம் சார்பில் வரும் 13ம் தேதி டெல்லி நோக்கிய பேரணியும், வரும் 16ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமும் நடப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 26 விவசாயிகள் அமைப்புகள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் (பிப். 13) டெல்லியில் பேரணி நடக்கிறது.

பஞ்சாப்பில் இருந்து 10,000 டிராக்டர்களுடன் டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுக்க உள்ளனர். இதை தடுக்க விவசாய அமைப்பு தலைவர்களை கைது செய்ய போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகள் அரியானா வழியாக டெல்லிக்கு செல்வதை தடுக்க அம்பாலாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் அரியானா இடையேயான ஷம்பு எல்லை சிமெண்ட் தடுப்பு மற்றும் முள்வேலியால் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. காகர் ஆற்றின் பாலம் மூடப்பட்டது. டிராக்டர்கள் செல்ல முடியாத வகையில் உள்ளே குழி தோண்டப்பட்டு வருகிறது. மேலும் வரும் 16ம் தேதி நாடு முழுவதும் பல்வேறு விவசாயிகள் அமைப்புகளால் பாரத் பந்த் நடத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.

The post விவசாயிகள் சங்கங்கள் சார்பில் வரும் 16ல் நாடு முழுவதும் ‘ஸ்டிரைக்’: பஞ்சாப், அரியானாவில் 144 தடை appeared first on Dinakaran.

Tags : Nationwide ,strike ,Punjab, ,NEW DELHI ,Farmers' Union ,Delhi ,Kisan Morcha ,Kisan Mastur Morcha ,Associations ,Punjab ,Ariana ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவை தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு