×

மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கைது செய்யப்படுவதுடன், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள படகுகளும் கடற்படையால் கைப்பற்றப்படுகின்றன. மேலும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் இலங்கை நீதிமன்றத்தால் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன.

இதுபோல் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கையில் அரசுடமையாக்கப்பட்டுளன. இவற்றில் 50க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டு உடைக்கப்பட்டுவிட்டன. 2018 முதல் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட மீனவர்களின் 150 படகுகள் இன்று வரை மீட்கப் படாமல் இலங்கையில் உள்ளன. இதனால் மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து கஷ்டப்பட்டு வருகின்றன. மேலும் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் இன்று வரை தொடர்கிறது. மீனவர்கள் கைது தொடர்ந்தாலும் சில வாரங்கள் சிறைவாசத்திற்குப்பின் மீனவர்கள் மட்டும் திரும்புகின்றனர். ஆனால் மீனவர்களின் படகுகள் அரசுடமையாக்கப்படுவது தொடர்கின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகளை இழந்து வரும் நிலை உருவாகியுள்ளது. மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தி, கடலில் மீன்பிடி தொழில் மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக மீனவர்கள் பிரச்னையில் ஒன்றிய பாஜ அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடந்து கொள்வதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இன்று ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேஸ்வரம் நகராட்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி, மாநில மீனவர் அணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலர் பேசினர். ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் திமுக ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Dimuka protest ,EU government ,Rameshwaram ,Dhimugavins ,Rameshwar ,Union State of Bahia ,Sri Lankan Navy ,Sea of Bagh Strait ,Gulf of Mannar ,Dimuka ,Dinakaran ,
× RELATED செறிவூட்டப்பட்ட அரிசி திட்டத்துக்கு...