×

செங்கம் அருகே இருதரப்பு பிரச்னையால் 7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட காளிஅம்மன் கோயில் உண்டியல்: மக்கிய ரூபாய் நோட்டுகள் இருந்தது மீண்டும் திருவிழா நடத்த ஏற்பாடு

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதன்காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டது. அதோடு திருவிழா நடத்தப்படாமல், கோயில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் செங்கம் வட்டாட்சியர் முருகன் தலைமையில், பாச்சல் காவல் உதவி ஆய்வாளர் லதா, தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் செல்வம் ஆகியோர் முன்னிலையில் அமைதி சமரச பேச்சுவார்த்தை கூட்டம் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. தொடர்ந்து மீண்டும் கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

இந்நிலையில், 7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது. மேலும் 2016ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ₹500, ₹1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ₹2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது. மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். 7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்னையால் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

The post செங்கம் அருகே இருதரப்பு பிரச்னையால் 7 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட காளிஅம்மன் கோயில் உண்டியல்: மக்கிய ரூபாய் நோட்டுகள் இருந்தது மீண்டும் திருவிழா நடத்த ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Kaliamman ,Temple ,Undial ,Bengam ,Chengam ,Tiruvannamalai District ,Kannakurk ,Kalliamman Temple ,Ikoil ,Cengam ,
× RELATED அம்மன் கோயிலில் தாலி திருட்டு