×

வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேர் தயார்படுத்தும் பணி மும்முரம்

திருவாரூர், பிப். 11: வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் கட்டுமான பணிக்காக தேர் பிரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி கொடியேற்று விழாவும், மார்ச் 21ம் தேதி ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வருவது தியாகராஜசுவாமி கோயில். சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் போற்றப்படுகின்றனர். கோயிலின் ஆழித்தேரானது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும், அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆழித்தேரோட்டம் ஆரம்ப காலத்தில் தியாகராஜருக்கு உகந்த நட்சத்திரமான பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் காலபோக்கில் நிர்வாக வசதி மற்றும் பொருளாதார வசதியை கணக்கில் கொண்டு பல்வேறு தேதிகளில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆழித்தேரோட்டத்தை ஐதீக முறைப்படி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தான் நடத்த வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு முதற் கடந்தாண்டு வரையில் தொடர்ந்து 3 ஆண்டு காலமாக பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் பங்குனி மாத ஆயில்ய நட்சத்திரம் வரும் மார்ச் மாதம் 21ம் தேதி வருகிறது.

இந்த தேதியில் தேரோட்டம் நடத்துவதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. பங்குனி உத்திர பெருவிழாவானது வழக்கமாக தைபூசம் நாளில் பந்தக்கால் முகூர்த்ததுடன் துவங்கும். நடப்பாண்டில் கடந்த மாதம் 25ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் மஹாத்துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றம் வரும் 27ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு ஆழித்தேருக்கு முன்பாக விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும், ஆழித்தேருக்கு பின்னால் கமலாம்பாள் மற்றும் சண்டீகேஸ்வரர் தேர்களும் இயக்கப்படும். ஆழித்தேர் உள்ளிட்ட அனைத்து தேர்களும் கட்டுமான பணிக்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலம் தேவை என்பதால் தற்போது முதற்கட்டமாக விநாயகர், சுப்ரமணியர் தேர்களின் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேர் தயார்படுத்தும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Tiagaraja Swami Temple ,Thiruvarur ,Thiagaraja Swami Temple ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்