×

மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்

புதுக்கோட்டை, பிப்.10: தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான \”வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது\” ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கிவருகிறது. நமது புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டமானது நான்கு வட்டாரங்களில் 172 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக் கடன் பெற்றுத்தருதல், தொழில் நுட்ப விபரங்கள், திறன் பயிற்சி குறித்த விவரங்கள், சந்தைப் பற்றிய தகவல்கள், நிதி இணைப்புகள் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை “மதி சிறகுகள் தொழில் மையம்” மூலமாக வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வழங்கி வருகிறது.

தொழில் நிறுவன வளர்ச்சியின் அளவு பெரிதாகும்போது தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலைநிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது. உதாரணமாக சந்தைபடுத்துதல், குறியிடுதல், பொட்டலமிடுதல், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள். இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிர் தொழில் முனைவோருக்கு குறிப்பாக கிராமப்புற மகளிர் தொழில் முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேற்கண்ட சிறப்பான சேவைகளை பெற மகளிர் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வருகின்ற 13ம் தேதி மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், புதுக்கோட்டை என்ற இடத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின் தொழில் கனவுகளை மெய்யாக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றேன். மகளிர் தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவும். இவ்வாறு கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

The post மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் appeared first on Dinakaran.

Tags : Women Entrepreneur Discovery Camp ,Pudukottai ,Tamil Nadu Government ,Women Entrepreneurship Discovery Camp ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாநகராட்சியுடன்...