×

7 ஆண்டில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு

 

நாமக்கல், பிப்.11: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 7 ஆண்டுகளில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த கலைக்குழு பிரசாரம், நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரியில் உள்ள பஸ் நிலையங்களில் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 2017ம் ஆண்டு முதல் தற்போது வரை, கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், நூற்பாலைகள் மற்றும் விவசாய தொழில்களில் கொத்தடிமைகளாக இருந்த 126 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 ேபர் நாமக்கல் மாவட்டத்தையும், 34 பேர் வெளி மாவட்டங்களையும், 83 பேர் வெளி மாநிலங்களையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதியாக ₹28.80 லட்சம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவன உரிமையாளர்களின் மீது, 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு, அந்நிறுவன உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கண்காணிப்பு குழுவின் மூலம், தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தும் உரிமையாளர்கள் மீது கொத்தடிமைத் தொழிலாளர் முறை(ஒழிப்பு) சட்டத்தின் கீழ், 5 ஆண்டுக்கு குறையாத வகையில் கடுமையான சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 7 ஆண்டில் 126 கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Labor Commissioner ,Thirunandan ,Namakkal district ,Bonded Labor System ,
× RELATED தொழில், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகள்