×

அனுமதியின்றி வைத்த பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம்

 

அரூர், பிப்.11: அரூர் பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட டிஜிட்டல் பிளக்ஸ் பேனரால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் நகரில், மொரப்பூர், கம்பைநல்லூர், திப்பம்பட்டி கூட்ரோடு, தீர்த்தமலை, கோட்டப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, அதிகாரப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர் அமைத்துள்ளனர். இந்நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடமான ரவுண்டானா பகுதி, பஸ்நிலையம், அரசு மருத்துவமனை, முக்கிய சாலை சந்திப்பு, சிக்னல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதியின்றி ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைத்துள்ளனர். அவை குறிப்பிட்ட நாட்களை கடந்தும் அகற்றப்படாமல் உள்ளன. குறிப்பாக கடந்த வாரம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அதிமுகவினர் வைத்த பேனர்கள் தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது.

மேலும், நெடுஞ்சாலையோரங்களில், ஆங்காங்கே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. மேலும், பலத்த காற்று அடிக்கும் போது விளம்பர பதாகைகள் கிழிந்து மின் ஒயர்களில் விழுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பொது இடங்களில் அனுமதியின்றி கட்-அவுட், பிளக்ஸ் பேனர் வைக்கவும், சுவரொட்டி ஒட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைப் பின்பற்றாமல் வைக்கப்படும் பேனர்களால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி பேனர் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

The post அனுமதியின்றி வைத்த பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Arur Nagar ,Morapur ,Campinallur ,Tippampatti Kootrodu ,Theerthamalai ,Kottapatti ,Dinakaran ,
× RELATED 125 மூட்டை மஞ்சள் ₹12.5 லட்சத்திற்கு ஏலம்