×

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை; தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27 இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 2022 அக்டோபர் மாதம், கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் பலியானார். இவருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் தீபாவளியையொட்டி கூட்ட நெரிசலில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம் எனச் சந்தேகம் எழுப்பப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை, என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே கைதான 6 பேர் உள்பட கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 13 பேரையும் என்ஐஏ அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கார் சிலிண்டர் வெடித்த வழக்கு சம்மந்தமாக இவர்களை அடிக்கடி காவலில் எடுத்தும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிலரது வீடுகளிலும் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று என்ஐஏ அதிகாரிகள் சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோவையில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்றது. 2 கார்களில் வந்த 7 அதிகாரிகள் உக்கடம் அல் அமீன் காலனியில் உள்ள ஏசி மெக்கானிக் ஹபீபுர் ரகுமான் வீடு, உக்கடம் என்எஸ் கார்டனில் உள்ள பைசல் ரகுமான் வீடு, போத்தனூரில் நாசர் வீடு உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல, நெல்லை மாவட்டம், ஏர்வாடி முகைதீன் நகர் ரஜப் தெருவை சேர்ந்த பக்ருதீன் அலி அகமது (38) என்பவர் வீட்டில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் என்ஐஏ ஏடிஎஸ்பி பரத்நாயக் தலைமையிலான 3 அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் உள்ள ஒரு தேசிய வங்கி மேலாளர் மற்றும் அதே வங்கி மண்டல மேலாளர் ஆகியோரும் என்ஐஏ அதிகாரிகளுடன் வந்துள்ளனர். எனவே வங்கியின் மூலம் ஹவாலா பணம் பரிமாற்றம் நடந்ததா? என்ற கோணத்தில் இந்த சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. மதுரையை சேர்ந்த ‘வஹ்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவர் அலிஜிகாத் (என்ற) முகமது அபுதாஹிர் வீட்டிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முகமது தாபிக் என்பவரின் மகன் சுலைமான் வீட்டிலும் நேற்று அதிகாலை 5.45 மணியிலிருந்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 4 பேர் சோதனை மேற்கொண்டனர்.

இதே போல், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருக்கத்தை சேர்ந்த கலைமான் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் விருத்தாச்சலம் வந்த அவர், தாயாருடன் வசித்துள்ளார். அங்கு இவர் துணிக்கடை நடத்தியுள்ளார். இந்நிலையில் இவரது செல்போனுக்கு ெவளிநாடுகளில் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது. இதனால் என்ஐஏ அதிகாரிகள் இவரது வீட்டில் சோதனை நடத்தியதாக தெரிகிறது. சென்னையை பொறுத்த வரையில், திரு.வி.க. நகரில் உள்ள முகமது அப்துல்லா பாஷா என்பவர் வீட்டிலும், பெரம்பூர் தில்லைநாயகம் பிள்ளை ஐந்தாவது தெரு அட்டாவுல்லா பாட்ஷா (40) என்பவர் வீட்டில் நேற்று காலை 5:30 மணியில் இருந்து 8.30 மணி வரை என் ஐ ஏ ஆய்வாளர் பிரசாந்த் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை செய்தனர். மேலும், வில்லிவாக்கம் ரயலா நகர், பல்லாவரம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக 5க்கும் மேற்பட்டவர்களுக்கு என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும், கோவை, நெல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம். கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் இடங்களில் நேற்றைய தினம் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை எற்படுத்தி உள்ளது. அனைவரது வீடுகளுக்கும் என்ஐஏ அதிகாரிகள் சரியாக காலை 5.30 மணிக்கு சென்றள்ளனர். சோதனை நடத்தப்பட்ட வீடுகளிலிருந்து லேப்டாப், செல்போன்கள் போன்றவற்றை என் ஐ ஏ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரம் தமிழ்நாட்டில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : NIA ,Tamil Nadu ,Coimbatore ,Chennai ,Madurai ,Nellai ,Ukkadam Fort Iswaran Temple ,
× RELATED சுற்று வட்டார பகுதிகளில் வெயிலின்...