×

திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் திடீர் மரணம்


தாம்பரம்: பெரம்பூரில் திருமணமான 20 நாட்களில் புதுப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விநாயகபுரம் வேல்முருகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அனந்தராமன் – ஆனந்தி தம்பதி. இவர்களது மகள் இந்துஜா (27). மகன் மோனிஷ்வர். இந்துஜா ஐடி துறையில் பணிபுரிந்து வந்தார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். கடந்த 5 வருடங்களாக, பெரம்பூர் ஜமாலியா எஸ்பிஐ காலனி 2வது தெருவை சேர்ந்த ஹரிகரன் (30) என்பவரை காதலித்து, கடந்த ஜனவரி 21ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் இந்துஜா திருமணம் செய்தார். நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் கணவர் வீட்டில் இந்துஜா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்துள்ளார். ஹரிகரன் இந்துஜாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இந்துஜா வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரிகரன் மற்றும் அவரது குடும்பத்தினர், இந்துஜாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்துஜாவின் உடலை சோதனை செய்ததில், உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை என்பதால் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் திருமணம் ஆகி 20 நாட்கள் மட்டுமே ஆவதால் வழக்கை கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்தனர். இந்நிலையில், இந்துஜாவின் தாய் ஆனந்தி தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும், அவர் எப்படி உயிரிழந்தார் என தெரிய வேண்டும் எனவும் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமான 20 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post திருமணமாகி 20 நாட்களே ஆன நிலையில் புதுப்பெண் திடீர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Perampur ,Anantharaman ,Anandi ,Velmurugan Nagar ,Vinayakapuram, Chennai ,Induja ,Monishwar ,
× RELATED சென்னையில் இன்டர்லாக் சிக்னல் பணிகள்...