×

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டி: புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், சிறிய கட்சிகளை இணைத்து போட்டியிட பாஜ முடிவு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த கட்சியும் பாஜவுடன் தான் கூட்டணி என்பதை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் பாஜ கூட்டணியில் புதிய நீதிக்கட்சி போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. இது குறித்து புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் நேற்று அளித்த பேட்டி: பாஜ கூட்டணியில் வேலூர் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன். புதிய நீதிக் கட்சி சார்பில் கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் குறைந்தது 20 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுபவர்கள் வெற்றி பெறுவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்முனை போட்டியாக தேர்தல் களம் இருக்கும். வேலூர் கோட்டையில் தாமரை மலரும். மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் உள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்திற்குள் அதிமுகவின் கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம். இவ்வாறு அவர் கூறினார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜ சார்பில் ஏ.சி.சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளதாக அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்து இருந்து குறிப்பிடத்தக்கது. ஏ.சி.சண்முகம் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கி திமுக வேட்பாளரிடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிதான் யார், யாருக்கு எந்த தொகுதி என்று அறிவிக்கும். ஆனால், பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சி தானாகவே தொகுதியை முடிவு செய்து வேட்பாளரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

The post வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜவின் தாமரை சின்னத்தில் போட்டி: புதிய நீதிக்கட்சி ஏ.சி.சண்முகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Vellore ,New Justice Party ,A.C. Shanmugam ,AIADMK ,Justice Party ,A.C. ,Shanmugam ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...