×

நிதி ஒதுக்கீட்டில் தென்மாநில புறக்கணிப்பு பிரச்னை கர்நாடகாவில் பா.ஜ-காங்கிரஸ் மோதல்

தனிநாடு கேட்பவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் பா.ஜ ஈஸ்வரப்பா ஆவேசம் தென் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு பிரச்னையில் கர்நாடகாவும் புறக்கணிக்கப்பட்டதாக கோரி தனி நாடு கேட்கும் சூழல் உருவாகும் என்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் சகோதரர் டிகே சுரேஷ் எம்பி பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த பா.ஜ மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, “எம்பி டி.கே. சுரேஷ் மற்றும் எம்எல்ஏ வினய் குல்கர்னி ஆகிய இருவரும் தேசதுரோகிகள், இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும். பிரதமர் மோடியை கீழ்தரமாக விமர்சனம் செய்தும், நாட்டைப் பிரிவினைப்படுத்தும் கருத்து வெளியிடும் அவர்களை போன்றவர்களை சுட்டுக் கொல்லும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துவேன். நேரு காலத்திலிருந்தே இந்த மாதிரியான நாடு பிளவுபட்டது,’’ என்றார். கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் இந்த கருத்து கொலை மிரட்டல் செய்யும் வகையில் இருப்பதால், தாவணகெரே போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த புகாரில் நேரில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் ஈஸ்வரப்பாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

உங்கள் வீட்டிற்கே வருகிறேன் சுட்டுக்கொல்ல தயாரா டிகே சுரேஷ் கேள்வி ஈஸ்வரப்பா பேச்சு குறித்து எம்பி டி.கே.சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஒன்றிய அரசு தென்மாநிலங்களை புறக்கணித்தால், தனி நாடு கோரிக்கை எழுப்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்று கருத்து தெரிவித்தேன். இதிலிருந்து நான் பின்வாங்குவதில்லை. அதே சமயத்தில் நான் கூறியது தேச துரோகமான கருத்தும் கிடையாது. நான் இப்படி பேசியதால், என்னை கொலை செய்ய வேண்டும் என்று ஈஸ்வரப்பா கூறியுள்ளார். நான் அவர் வீட்டிற்கு செல்கிறேன். தைரியம் இருந்தால், சுட்டு கொல்லட்டும் பார்க்கலாம். வேறு யாரும் என்னை ஏன் சுட வேண்டும்? நீங்கள் (ஈஸ்வரப்பா) எனக்கு நேரம் கொடுத்தால், கன்னடர்களின் நலனுக்காக நான் உங்கள் முன் நிற்பேன். நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன். விரைவில் ஒரு நேரத்தைக் குறிப்பிட்டு ஒரு வாரத்தில் உங்களைச் சந்திப்பேன். என்னைச் சுட விரும்பினாலும் தயாராக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

 

The post நிதி ஒதுக்கீட்டில் தென்மாநில புறக்கணிப்பு பிரச்னை கர்நாடகாவில் பா.ஜ-காங்கிரஸ் மோதல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Karnataka ,Eshwarappa ,Deputy Chief Minister ,TK Sivakumar ,TK Suresh ,Dinakaran ,
× RELATED வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றாததால்...