×

பட்டியலின மக்கள் அல்லாதோருக்கு விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரியலூர் தாலுகா பெரியநாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது தாத்தாவுக்கு இதே கிராமத்தில் அரசு வழங்கிய 1.12 ஏக்கர் பஞ்சமி நிலம் இருந்துள்ளது. இதனை கடந்த 1963ல் பட்டியலினத்தை சேராத பெருமாள் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து பல்வேறு கட்டங்களில் இந்த நிலத்திற்கு விற்பனை ஒப்பந்தங்கள் நடந்துள்ளன. இந்த விற்பனை ஒப்பந்தங்களை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி காமராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் டி.ஞான பானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, ”பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை பட்டியலினம் சாராத பிரிவினருக்கு விற்பனை ஒப்பந்தம் செய்தது சட்டவிரோதமான செயல்.

இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய முடியாது. இதுகுறித்து மனுதார் கடந்த 2022ல் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பிலிருந்து இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மனுதாரர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்றுள்ள ஆவணங்களின்படி மனுதாரர் குறிப்பிடும் நிலம் பஞ்சமி நிலம் என்பது தெளிவாகிறது. இந்த நிலத்தை வகை மாற்றம் செய்ய அரசுக்கும் அதிகாரம் இல்லை. எனவே, மனுதாரர் குறிப்பிட்டுள்ள பஞ்சமி நிலத்தை பயன்படுத்திவரும் நபர்களிடம் இருந்து மீட்க வேண்டும். அந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட பட்டாக்களை ரத்து செய்ய வேண்டும். அந்த நிலத்தை வருவாய் பதிவேடு ஆவணங்களில் பஞ்சமி நிலம் என்று பதிவு செய்து தகுதியான நிலமற்ற பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

 

The post பட்டியலின மக்கள் அல்லாதோருக்கு விற்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்டு தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Panchami ,Madras High Court ,Tamil Nadu government ,Chennai ,Kamaraj ,Periyanagalur ,Ariyalur taluk ,Perumal ,
× RELATED கல்வி நிறுவனத்தில் வர்த்தக கண்காட்சி...