×

துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: உணவக ஊழியர் கைது

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்பகுதி உணவகத்தில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றுபவர் அஜெய் (30). இவர், நேற்று பணி முடிந்து வருகைப் பகுதியில் ஊழியர்கள் மற்றும் டிராலிகள் கொண்டு செல்லும் கேட் வழியாக வெளியில் வந்தார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள், அஜெயை நிறுத்தி சோதனை செய்தனர். சந்தேகம் ஏற்படவே அவர் அணிந்திருந்த ஷூக்களை கழற்றி சோதித்தனர். அதில் சாக்சுக்குள் 4 சிறிய பாக்கெட்டுகள் இருந்தன.

அதை பிரித்துப் பார்த்தபோது, தங்கப் பசைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அெஜயையும், அவர் மறைத்து வைத்திருந்த தங்க பசை அடங்கிய பாக்கெட்களையும், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கப்பசை ஒரு கிலோ 386 கிராம் எனவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடி எனவும் தெரியவந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் அஜெயை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில், துபாயிலிருந்து நேற்று அதிகாலை சென்னை வந்த விமானத்தில், பயணி ஒருவர் இந்த தங்க பசை அடங்கிய பாக்கெட்டுகளை கடத்தி வந்து, அஜெயிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்று விட்டார். அஜெய் தனது ஷூ சாக்சுக்குள் அதை மறைத்து வைத்து, சுங்கச் சோதனை இல்லாமல் வெளியில் கொண்டு போய், கடத்தல் பயணியிடம் கொடுக்க இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து துபாயிலிருந்து தங்கப் பசையை கடத்தி வந்த நபர் யார் என்று சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: உணவக ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Meenambakkam ,Ajay ,Chennai airport ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...