செங்கல்பட்டு: மறைமலைநகர் அருகே சிகிச்சைக்காக அனுமதித்த ஊழியர் உயிரிழந்ததால், மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த நின்னக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேணு என்பவரது மகன் ஈஸ்வரமூர்த்தி (45). இவருக்கு உஷா (40) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் உள்ளனர். டிங்கரிங் வேலை பார்த்து வந்த ஈஸ்வரமூர்த்திக்கு நேற்று காலை திடீர் நெஞ்சுவலி ஏற்ப்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக காட்டாங்கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஈஸ்வரமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளித்த பிறகுதான் மேல்சிகிச்சை அளிக்க முடியும்.
அதற்கு மருத்துவ கட்டணம் ₹50 ஆயிரம் முன்பணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட ஈஸ்வரமூர்த்தியின் மனைவி, பணத்துக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். அதற்குள் உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஈஸ்வரமூர்த்திக்கு ஆஞ்சியோ சிகிச்சையை முடித்து, அடுத்தக்கட்ட சிகிச்சையையும் அளித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஈஸ்வரமூர்த்தி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதை மருத்துவமனை நிர்வாகத்தினர், உறவினர்களிடம் எப்படி சொல்வது என தெரியாமல் தயங்கி தாமதமாக கூறியுள்ளனர். இதுமட்டுமின்றி ஈஸ்வரமூர்த்திக்கு சிகிச்சை அளித்ததற்கான ₹3.50 லட்சம் மருத்துவ கட்டணத்தை கட்டிவிட்டு உடலை பெற்றுக் கொள்ளுமாறு மருத்துவமனை நிர்வாகம் ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தாரை கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது.
அப்போது எங்களுடைய கையொப்பமில்லாமல் எப்படி சிகிச்சை அளித்தீர்கள், உங்களது தவறான சிகிச்சையால்தான் ஈஸ்வரமூர்த்தி இறந்துவிட்டார். அவரை உயிரோடு கொடுங்கள், பணத்தை கட்டுகிறோம் என்று கூறி ஈஸ்வரமூர்த்தியின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஈஸ்வரமூர்த்தியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post சிகிச்சைக்காக அனுமதித்த ஊழியர் உயிரிழப்பு: மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.