அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபட்டிபுதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இரண்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிராமத்தின் ஒரு பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து கிராம மக்கள் தண்ணீர் வருகின்ற பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். ஆனால் போதிய தண்ணீர் கிடைக்காததால், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குடிநீர் தட்டுப்பட்டை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை காலி குடங்களுடன் அரூர்-கடத்தூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த அரூர் காவல் துறையினர் மற்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரதான குழாய்களில் சிலர் குழாய் அமைத்து தண்ணீரை பிடித்து வருவதால் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு சிரமமடைந்துள்ளோம்.
இந்த பிரதான குழாயில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகளை துண்டித்து விட்டு, குடிநீரை முறையாக வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அப்போது எல்லா பகுதிகளுக்கும் தண்ணீர் கிடைக்கும் வகையில் நடவடிககை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.இதனால் சமாதானமடைந்த மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post சீரான குடிநீர் வினியோகம் கேட்டு அரூரில் கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.