×

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் :பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரிக்கும் சைபர் கிரைம் போலீஸ் : தீவிர விசாரணை

சென்னை : சென்னையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணையை போலீஸ் தீவிரப்படுத்தியது. சென்னை அண்ணாநகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வழக்குகளை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து சென்னை காவல்துறை உத்தரவிட்டது. இந்த நிலையில், ஏற்கனவே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் குற்றப்பிரிவு போலீஸ் ஈடுபட்டுள்ளது. இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தமிழக காவல் நிலையங்களில் உள்ள பழைய குற்றவாளிகளின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து யாரேனும் கைது செய்யப்பட்டனரா என்றும் மிரட்டல் அனுப்பிய நபரின் மின்னஞ்சல் முகவரியை கண்டுபிடிக்கவும் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மெயில் மூலமாக மிரட்டல் வந்து இருப்பதால் மெயில் முகவரியை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அந்த நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியவில்லை. அது தெரியாதபடி அந்த நபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்தனர். மேலும் அங்கீகரிக்கப்படாத நெட்வொர்க் நிறுவனத்தின் இணையத்தை அந்த நபர் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது. இதனால் இது தொடர்பாக இன்டர்போல் உதவியை நாடவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் போலீஸாரின் உதவியை நாட போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

The post பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் :பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரிக்கும் சைபர் கிரைம் போலீஸ் : தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Annanagar ,Parimunai ,Gopalapuram ,Raja ,Annamalaipuram ,J. J. ,Nagar ,Tirumashasi ,
× RELATED கோயம்பேட்டில் கஞ்சாவுடன் வாலிபர் கைது