×

தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

*ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

கூடலூர் : தை அமாவாசையை முன்னனிட்டு சுருளிக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அருவியில் புனிதநீராடி, கோயிலில் வழிபட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இங்கு பூதநாராயணன் கோயில், ஆதிஅண்ணாமலையார் கோயில், சுருளிவேலப்பர் கோவில், சுருளிமலை ஸ்ரீ ஐயப்பசாமி கோவில் மற்றும் கைலாய நாதர் குகை கோயிலும் உள்ளன. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்.

இது சுற்றுலா தலமாகவும், தமிழகத்தின் புண்ணியதலமாகவும் விளங்குகிறது. சுருளி நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறும். இங்கு சித்திரை, தை பூசம், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற முக்கிய விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தேனி மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் சுருளிக்கு வந்தனர்.
அருவியில் குளித்த பின்னர் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வழிபாடுகள் நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அங்குள்ள கோயில்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து, அன்னதானம், வஸ்த்திர தானம் செய்தனர்.

சுருளி ஆதி அண்ணாமலையார் கோவிலில் மக்கள் நோய்நொடியின்றி நலமுடன் வாழ, பூஜாரி முருகன் தலைமையில் அண்ணாமலையாருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அண்ணாமலையாருக்கு தூய நீர், பசும்பால், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் உட்பட பதினெட்டு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. கோயில் அன்னதான மடத்தில் காலை முதல் அன்னதானம் நடைபெற்றது. அண்ணாமலையார் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சுருளி வரும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பம் கிளை 2, தேவாரம், லோயர்கேம்ப் பணிமனைகளிலிருந்து 21 சிறப்பு பஸ்கள் 5 நிமிட இடைவெளிதோறும் சுருளி அருவிக்கு இயக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி உத்தரவில் கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழங்கு போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தை அமாவாசையை முன்னிட்டு நேற்று சுருளி அருவிக்கு செல்ல பக்தர்களிடம் வனத்துறை நுழைவுக்கட்டணம் வசூலிக்கவில்லை.அருவி பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகள் பயன்படுத்துவதற்கு வனத்துறை தடை விதித்து உள்ளது.

ஆனால் சுருளி அருவி நுழைவாயில் பகுதியில் உள்ள கடைகளில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. வனத்துறையின் தடை குறித்து தெரியாமல் சோப்பு, ஷாம்பு வாங்கிச்செல்லும் சுற்றுலாப்பயணிகளிடம் அருவிப்பகுதியில் வனத்துறை பணியாளர்கள் அதை பறிமுதல் செய்கின்றனர். எனவே சுருளி அருவியில் கடைகளில் சோப்பு, ஷாம்பு விற்பதை தடை செய்ய சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

<தேனி அருகே வீரபாண்டியில் உள்ள முல்லை ஆற்றங்கரையில் நேற்று நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் குவிந்தனர். முல்லையாற்றில் குளித்து பின்பு ஆற்றங்கரையில் தர்ப்பணம் செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் வேத விற்பனர்கள் மூலமாக மறைந்த தங்களது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து பிண்டங்களை நீர் நிலையில் கரைத்தனர்.இதன் மூலமாக மறைந்த மூதாதையர்கள் ஆன்மா அமைதி பெறுவதாகவும் அவர்களது ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

அருவிக்குச் செல்ல வனத்துறையின் வேன்

கடந்த 2012ம் ஆண்டு சுருளி அருவி அமைந்துள்ள மேகமலை வனப்பகுதி வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. சுருளி அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களிடம் வனத்துறை தாலா 30 ரூபாய் நுழைவுக்கட்டணம் வவசூலித்தது. மேலும் சுருளி நுழைவாயில் பயணிகள் விடுதியில் இருந்து அருவி பகுதி வரை பஸ், கார், வேன், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிப்பகுதிக்கு நடந்து செல்ல மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் சிரமப்பட்டதை அடுத்து தற்போது வனத்துறையின் வேன் மட்டும் கட்டணத்துடன் இயக்கப்படுகிறது.

அமாவாசை சிறப்பு

அமாவாசை திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. நம் முன்னோர்கள் ஒரு வருடத்தை 2 அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள 6 மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர்.

உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன. ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் தமிழகத்தில் ராமேசுவரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி பகுதியில் கடல்களிலும் மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள புண்ணிய தலமான சுருளி அருவியிலும் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வர்.

The post தை அமாவாசையை முன்னிட்டு சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் appeared first on Dinakaran.

Tags : Thai New Moon ,KUDALUR ,SURULI ,ARUVI ,Theni ,Gampam Churuli Aruvi ,Bothnarayanan Temple ,Adhianamalaiyar ,Churuli Aru ,New Moon ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்