×

வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து இயந்திரங்கள் வருகை 40 சதவீத சம்பா நெல் அறுவடை நிறைவு

*நேரடி நெல் கொள்முதலால் விவசாயிகள் மகிழ்ச்சி

வலங்கைமான் : வலங்கைமான் பகுதியில் வெளி மாநில, மாவட்டங்களில் இயந்திரங்ள் வந்துள்ளன. இதனால் வலங்கைமான் பகுதியில் 40 சதவீத சம்பா நெல் அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் அறுவடை செய்யப்பட்ட நெல், நேரடி கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் எடுத்து கொள்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகிறது. இருப்பினும் பாசனத்திற்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில் மின்மோட்டார்கள் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை துவங்கி ஆர்வத்துடன் செய்தனர். நடப்பாண்டு 10 ஆயிரம் எக்டேர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சம்பா சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் கை நடவு இயந்திரம் நடவு ஆகிய முறைகளில் சாகுபடி பணிகள் நடைபெற்றது.

ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நிர்வாக செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் நேரடி விதைப்பில் அதிகம் ஆர்வம் காட்டினர். அடுத்தபடியாக ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக இயந்திர நடவு சுமார் 30 சதவீதம் மேற்கொள்ளப்பட்டது. வழக்கமான கை நடவு மூலம் வடமாநில தொழிலாளர்கள் உதவியுடன் சுமார் 50 சதவீதம் அளவிற்கு கை நடைபெற்றது.

மொத்தத்தில் வலங்கைமான் தாலுகாவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு சம்பா சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 60 சதவீதம் அளவுக்கு மின் மோட்டார்கள் மூலம் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 30 சதவீத சம்பா சாகுபடி பணிகள் வடகிழக்கு பருவமழை மற்றும் மேட்டூர் அணை நீரை நம்பி மேற்கொள்ளப்பட்டது. டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு முன் கூட்டிய தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், வலங்கைமான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறிப்பிடும் படியாக வடகிழக்கு பருவ மழை பெய்யவில்லை.

ஆனாலும் சம்பா நல்ல மகசூலுடன் உள்ள நிலையில், வலங்கைமான் பகுதியில் சம்பா அறுவடை பணிகள் ஜனவரி மாத இறுதியில் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை வலங்கைமான் தாலுகாவில் சுமார் 40 சதவீத அறுவடை பணிகள் முடிவுற்றுள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் 90 சதவீத அளவிற்கு அறுவடை பணிகள் முடிவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பா அறுவடை பணிகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அறுவடை இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்ட நெல்களை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

The post வெளி மாநில, மாவட்டங்களிலிருந்து இயந்திரங்கள் வருகை 40 சதவீத சம்பா நெல் அறுவடை நிறைவு appeared first on Dinakaran.

Tags : Valangaiman ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு