×

4 லட்சம் குழந்தை, பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்க முடிவு பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட கூடாது

*வரும் 16ம் தேதி வரை வழங்கப்படும்

*பயன்பெற மாவட்ட கலெக்டர் அழைப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 42 ஆயிரத்து 965 குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் துவக்க விழா நேற்று அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது.இதில் மாணவர்களுக்கு மாத்திரையினை வழங்கி கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கும் இந்த குடற்புழுநீக்க மாத்திரையானது வழங்கபடுகிறது.

அதன்படி இன்று (நேற்று 9ம் தேதி) துவங்கி வரும் 16ம் தேதி வரையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் நலமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 4 லட்சத்து 42 ஆயிரத்து 965 குழந்தைகள் மற்றும் பெண்கள் பயன் பெறுவார்கள்.

இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த பொதுசுகாதாரம், பள்ளிக்கல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அல்பெண்டசோல் மருந்து வழங்குதல் அங்கன்வாடி மையங்களில் 1 -முதல் 5 வயதிற்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத குழந்தைகள், 1 முதல் – 19 வயதிற்குட்பட்ட பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும், கல்லூரிகளில் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுகிறது.

1 முதல் 2 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரைமாத்திரையும், 2 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும். நோய்வாய்ப்பட்டிருக்கும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்கள் இந்த மாத்திரையை எடுத்துகொள்ள வேண்டாம் . மேலும் இந்த முகாமில் விடுபட்ட அனைவருக்கும் வரும் 16ம் தேதியன்று முழுமையாக வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்களது குழந்தைகளுக்கு குடற்புழுநீக்க மாத்திரை வழங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த வேண்டும். 20 முதல் 30 வயதுடைய பெண்களும் இந்த குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த் காந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post 4 லட்சம் குழந்தை, பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்க முடிவு பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட கூடாது appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Tiruvarur district ,Ammaiyappan ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...