×

கடலூர், பண்ருட்டி பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு

*மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கடலூர் : கடலூர் மற்றும் பண்ருட்டியில், வாடகை மற்றும் வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடலூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு கடை வைத்திருப்பவர்கள் மாதம் தோறும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் கொடுத்தும், சீல் வைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாநகராட்சியில் கடை வாடகை பாக்கி, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி உள்பட ரூ.70 கோடி வரி பாக்கி உள்ளது.

இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுரங்க பாதை அருகே உள்ள சுமார் 12 கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.70 லட்சம் பாக்கி வைத்துள்ளனர். இதை செலுத்த பலமுறை மாநகராட்சி மூலம் நோட்டீஸ் கொடுத்தும் கடை வைத்திருப்பவர்கள் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உத்தரவின் பேரில், செயற்பொறியாளர் கலைவாணி தலைமையில், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன், கண்காணிப்பாளர்கள் நூர்அலி, நவாஸ் மற்றும் ஊழியர்கள் நேற்று அந்த கடைகளுக்கு சீல் வைக்க சென்றனர்.

அப்போது அங்கு கடை வைத்திருப்பவர்கள் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதால் எங்களால் வாடகை செலுத்த முடியவில்லை என்று கூறினர். இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் 2 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதன் பின்னர் மற்ற 10 கடைக்காரர்கள் வாடகை செலுத்த ஒரு வாரம் அவகாசம் கேட்டனர். இதை ஏற்று அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சிக்கு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கடை வாடகை, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை வசூல் செய்யும் பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நகராட்சி முழுவதும் ஒலி பெருக்கி மூலம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்துமாறும், தவறும் பட்சத்தில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, கடைகளை பூட்டி சீல் வைத்தல், ஜப்தி போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடலூர் சாலை காந்தி பூங்கா பகுதியில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கி வைத்துள்ள 4 கடைக்காரர்களுக்கு பலமுறை எச்சரிக்கை செய்தும், நோட்டீஸ் வழங்கியும், அவர்கள் வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தனர். இதனால் நகராட்சி ஆணையாளர் ப்ரீத்தி உத்தரவின் பேரில் நகராட்சி மேலாளர் காதர்கான் முன்னிலையில் வரி பாக்கி செலுத்தாத 4 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இது குறித்து ஆணையாளர் ப்ரீத்தி கூறுகையில், பலமுறை எச்சரிக்கை விடுத்தும், போதிய கால அவகாசம் வழங்கியும் பலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலை தொடரும் பட்சத்தில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகி உள்ளோம். எனவே பண்ருட்டி பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்து வரி பாக்கிகளை செலுத்தி நகராட்சி வளர்ச்சிக்கு உதவ வேண்டும், என்றார்.

The post கடலூர், பண்ருட்டி பகுதியில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Cuddalore, Panruti ,Cuddalore ,Panruti ,Dinakaran ,
× RELATED 17 வயது சிறுமியுடன் காதல் 19 வயது சிறுவன் மீது வழக்கு