×

தஞ்சாவூர் அருகே பெண்ணின் வயிற்றில் 5 கிலோ கட்டி அகற்றம்

*அரசு மருத்துவர்கள் சாதனை

பட்டுக்கோட்டை : தஞ்சாவூர் அருகே பெண்ணின் வயிற்றில் இருந்து 5 கிலோ எடை கொண்ட கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கல்லங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47). இவருக்கு கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த செல்வியை, அவரது உறவினர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவரது வயிற்றில் 5 கிலோ எடையுள்ள கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அன்பழகன் அறிவுறுத்தலின்பேரில் தஞ்சாவூர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜுமைக்கேல், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரசன்னா, தலைமை மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மீனா, மயக்க மருந்து நிபுணர் டாக்டர் சுதாகர் மற்றும் செவிலியர்கள் வளர்மதி, மஞ்சுளா, ஜாக்குலின், அறுவை அரங்க உதவியாளர்கள் கருணாநிதி, பூங்கொடி, லலிதா, தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் நேற்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் செல்விக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

3மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் அவரது வயிற்றிலிருந்த 5 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றினர். இதையடுத்து செல்வி தற்போது நலமுடன் உள்ளார்.
பெண்ணின் வயிற்றிலிருந்த 5 கிலோ கட்டியை அகற்றி சாதனை படைத்த பட்டுக்கோட்டை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. செல்வியின் உறவினர்கள் அவரது உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

The post தஞ்சாவூர் அருகே பெண்ணின் வயிற்றில் 5 கிலோ கட்டி அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Pattukottai ,Balasubramanian ,Kallangadu ,Beravoorani ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...