×

உளுந்தூர்பேட்டை அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுப்பு

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெய்வனை ஊராட்சி பில்ராம்பட்டு கிராமத்தில் வயல்வெளி பகுதியில் மரங்கள் சூழ்ந்த இடத்தில் பலகை வடிவிலான கல் சிற்பம் இருந்தது. இதனை ஆய்வு செய்தபோது 5 அடி நீளமும், நான்கு அடி அகலமும் கொண்ட 8ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்து கொற்றவை சிலை என தெரியவந்துள்ளது.

எட்டு கரங்கள் கொண்ட இந்த சிலையில் வலது கரம் சக்கரத்தை ஏந்திய படியும், மற்ற கரங்களில் வேல், வில், கேடயம் மற்றும் அனைத்து கரங்களிலும் அடுக்கடுக்கான வளையல்கள் உள்ளது. கொற்றவை தலை அருகே வலது புறம் சூலமும், சிம்மமும் கட்டப்பட்டுள்ள நிலையில் இடதுபுறம் கலைமானும், கால் அருகே இருபுறமும் வீரர்கள் வடிவமைக்கப்பட்டு எருமை தலை மீது நின்று கம்பீரமாக கொற்றவை சிலை காட்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலைகள் உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள கிராமங்களில் அதிகளவில் இருந்தாலும் இந்த சிலையில் தனி சிறப்பாக தலை மகுடம் எங்கும் காணாத வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது தனி சிறப்பாகும். 1200 வருடம் பழமையான இந்த கொற்றவை சிலை இன்றும் வயல்வெளி பகுதியில் வளமையை காக்கும் தெய்வமாக காட்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

The post உளுந்தூர்பேட்டை அருகே 8ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Koratavai ,Raj Panneerselvam ,Sridhar ,Thamaraikannan ,Thiruvannamalai ,Kallakurichi district ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 15 பேர் படுகாயம்