*இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
குடியாத்தம் : குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தி உள்ளது. மேலும் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியாத்தம் வனச்சரகம் தமிழகத்தில் மிகப்பெரிய 2வது வன சரகம் ஆகும். இவை ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இங்கு அதிக அளவில் மான், கரடி, யானை, காட்டு நாய், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும்.
இதனை வனத்துறையினர் விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சி ராமாபுரத்தில் உள்ள விவசாய நிலத்தில் 4 காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.மேலும், செல்வம் என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம், வெங்கடேசனுக்கு சொந்தமான வாழை தோப்பு, அரிகிருஷ்ணனுக்கு சொந்தமான கேழ்வரகு பயிர் ஆகியவற்றினை மிதித்து தும்சம் செய்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் இதுகுறித்த குடியாத்தம் வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் மேளம் அடித்தும், பட்டாசு வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும் காட்டு யானைகள் மிதித்து சேதப்படுத்திய பயிர்களுக்கு சம்பந்தப்பட்ட துறையினர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் புகுந்து பயிர்களை மிதித்து சேதப்படுத்திய 4 காட்டு யானைகள் appeared first on Dinakaran.