×

தையூர் ஓஎம்ஆர் சாலையில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய பணியை விரைந்து தொடங்க வேண்டும்

திருப்போரூர், பிப்.10: தையூர் ஓஎம்ஆர் சாலையில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய, வணிக வளாக பணிகள் மீண்டும் தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் போதிய இடவசதி இல்லாததால், தையூரில் ஓஎம்ஆர் சாலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவிலான பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பேருந்து நிலைய வளாகத்தில் சுமார் 40 கடைகள் கொண்ட வணிக வளாகமும் கட்டப்படும் என அறிவித்து கட்டுமான பணிகள் தொடங்கின.

இதற்கான கேளம்பாக்கம், தையூர் பகுதிகளை சேர்ந்த வணிகர்களிடமிருந்து கணிசமான தொகை முன்பணமாக பெறப்பட்டது. சுமார் 40 கடைகளுக்கான கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டன. 15 ஆண்டுகள் நிறைவடைந்த பின்பும் இதுவரை பேருந்து நிலையமும், வணிக வளாக கட்டுமான பணிகளும் நடக்கவில்லை. தற்போது, அந்த இடத்தில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து பேய் பங்களாபோல் காட்சி அளிக்கிறது. இதனால், கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், கேளம்பாக்கத்தில் அமைந்துள்ள பேருந்து நிலையம் பிரதான ஓஎம்ஆர் சாலையையொட்டி இல்லாமல் கேளம்பாக்கம் கிராமத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகள் உள்ளே சென்று திரும்பி வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தையூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரு ஊராட்சிகள் அருகருகே அமைந்து அதிக மனைப்பிரிவுகள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை கட்டப்பட்டு ஒரே ஊராக காட்சி அளிக்கின்றன.

பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தையூர் ஊராட்சியாக இருந்தாலும் கேளம்பாக்கம் ஊராட்சியையொட்டியே அமைந்திருப்பதால் தையூர் ஓஎம்ஆர் சாலையில் புதிய பேருந்து நிலையத்தை அமைத்தால் பொதுமக்களுக்கும், பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு மூலமாக தையூர் ஓஎம்ஆர் சாலையில் ஏற்கனவே பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்றும், அங்கு கட்டப்பட்டு பாதியில் நிற்கும் வணிக வளாகத்தை புதுப்பித்து முழுமையாக கட்டி வணிகர்களுக்கு தரவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

The post தையூர் ஓஎம்ஆர் சாலையில் கிடப்பில் போடப்பட்ட பேருந்து நிலைய பணியை விரைந்து தொடங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : OMR Road ,Taiyur ,Tiruppurur ,Taiyur OMR road ,Kelambakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...