×

தேவ்தத் படிக்கல் அபார சதம் ரஞ்சியில் கர்நாடகா ரன் குவிப்பு

சென்னை: தமிழ்நாடு அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தேவ்தத் படிக்கல்லின் அபார சதத்தால் கர்நாடகா முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்துள்ளது. சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற கர்நாடகா பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்க வீரர்களாக ரவிகுமார் சமர்த், கேப்டன் மயாங்க் அகர்வால் களமிறங்கினர். அகர்வால் 20 ரன் எடுத்து சாய் கிஷோர் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். அடுத்து சமர்த் – படிக்கல் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்தனர்.

சமர்த் 57 ரன் எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். நிகின் ஜோஸ் 13, மணிஷ் பாண்டே 1, கிஷன் பெதாரே 3 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய படிக்கல் சதம் விளாசி அசத்தினார். படிக்கல் – ஹர்திக் ராஜ் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால், கர்நாடகா முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்துள்ளது (90 ஓவர்).  படிக்கல் 151 ரன் (216 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்), ஹர்திக் ராஜ் 35 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தமிழ்நாடு பந்துவீச்சில் சாய் கிஷோர் 3, அஜித் ராம் 2 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

புதுச்சேரி முன்னிலை: டி பிரிவில் புதுச்சேரி – ஜம்மு மற்றும் காஷ்மீர் மோதும் லீக் ஆட்டம், புதுச்சேரி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த ஜம்மு மற்றும் காஷ்மீர் 28.4 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 106 ரன்னில் சுருண்டது. பாசில் ரஷித் 27, சுபம் பண்டிர் 21, கேப்டன் கஜுரியா 15, அப்துல் சமத் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். புதுச்சேரி பந்துவீச்சில் சிடாக் சிங் 5, சாகர் உதேஷி 3, தாமோதரன் ரோகித் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய புதுச்சேரி அணி 55.1 ஓவரில் 172 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பரஸ் டோக்ரா 58, அருண் கார்த்திக் 50, ஆகாஷ் 19, மோகித் மிட்டன் 18 ரன் எடுத்தனர். ஜம்மு பந்துவீச்சில் அபித் முஷ்டாக், வன்ஷஜ் ஷர்மா தலா 5 விக்கெட் கைப்பற்றினர்.  66 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜம்மு மற்றும் காஷ்மீர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஒரு விக்கெட்டை பறிகொடுத்துள்ளது.

மும்பை 310/4: ராய்பூரில் சத்தீஸ்கர் அணியுடன் நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்துள்ளது. தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா – பூபென் லால்வானி முதல் விக்கெட்டுக்கு 244 ரன் சேர்த்து அசத்தினர். பிரித்வி 159 ரன் (185 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்), லால்வானி 102 ரன் (238 பந்து, 10 பவுண்டரி) பத்கல் 16, கேப்டன் ரகானே 1 ரன்னில் ஆட்டமிழந்தனர். சூர்யன்ஷ் 17, ஹர்திக் தமோர் 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சத்தீஸ்கர் பந்துவீச்சில் ஆஷிஸ் சவுகான் 3, விஷ்வஸ் மாலிக் 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

The post தேவ்தத் படிக்கல் அபார சதம் ரஞ்சியில் கர்நாடகா ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Devdath ,Karnataka ,Ranji ,CHENNAI ,Ranji Trophy Elite C division league ,Tamil Nadu ,Devdut Padalkal ,MA Chidambaram Stadium ,Chepakkam ,
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...