×

பாரத ரத்னாவில் இத்தனை அரசியலா? தாத்தாவுக்கு விருது கொடுத்து பேரனை தட்டி தூக்கிய பா.ஜ

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவை வீழ்த்த நாட்டில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை அமைத்து இருந்தன. உடனே பா.ஜவுக்கு தாங்கமுடியவில்லை. முதல் விக்கெட்டாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை எடுத்தது பா.ஜ. அதற்கு உதவியது பீகார் முன்னாள் பிரதமர் கர்பூரி தாக்கூருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா. இப்போது முன்னாள் முதல்வர் சரண்சிங் சவுத்திரிக்கு பாரதரத்னா விருது வழங்கி, உத்தரபிரதேச இந்தியா கூட்டணியை உடைத்து இருக்கிறது பா.ஜ. அங்கு சமாஜ்வாடி கட்சியுடன் சரண்சிங் பேரனும், ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின் தலைவருமான ஜெயந்த் சவுத்திரி கூட்டணி அமைத்து இருந்தார்.

ஜன.20ம் தேதி இந்தியா கூட்டணியில் அவருக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தது. அகிலேஷ்யாதவும், ஜெயந்த் சவுத்திரியும் இதற்கான உடன்பாடு செய்தனர். ஆனால் தொகுதி அறிவித்து 2 வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் கூட்டணி மாறி விட்டார் ஜெயந்த் சவுத்திரி. அதற்கு அவர் சொல்லும் காரணம் எங்க தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்துவிட்டார்கள். அதன்பின் மறுக்க முடியுமா என்று கேட்கிறார். மேலும் அவர் பா.ஜ கூட்டணியில் இணைவதையும் உறுதிப்படுத்தி விட்டார். அவர் கூறும்போது,’ எனது தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது கொடுத்து விட்டு பாஜ அழைக்கும் போது என்னால் எவ்வாறு மறுக்க முடியும்?.

முந்தைய அரசுகள் செய்யாததை பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார். இது அவரது தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. எளிய மக்களை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் எனக்கு மிகப் பெரிய நாள். மிகவும் உணர்ச்சிகரமான நாள். ஜனாதிபதி, ஒன்றிய அரசு, பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எடுக்கப்பட்ட முடிவு இது’ என்றார்.

நீங்கள் பாஜவுடன் கூட்டணி அமைக்க உள்ளீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயந்த் சவுத்ரி, ‘என்னால் எவ்வாறு மறுக்க முடியும்? அதேநேரத்தில், தொகுதிகள் குறித்தோ, வாக்குகள் குறித்தோ பேசுவதற்கான நாள் அல்ல இது. மக்களின் உணர்வுகளையும். நாட்டின் இயல்பையும் பிரதமர் மோடி உணர்ந்திருக்கிறார் என்பதை அவர் தனது இந்த முடிவின் மூலம் உணர்த்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

அகிலேஷ் யாதவுடன் ஜெயந்த் சவுத்ரி நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். இப்போது அவர் பாஜவுடன் கூட்டணி சேர இருப்பது உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதை கருத்தில் கொண்டே, சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* பேசி என்ன செய்வது? அகிலேஷ் விரக்தி
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிடம்,’ நீங்கள் ஜெயந்த் சவுத்ரியிடம் பேசினீர்களா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அகிலேஷ், ‘பாரத ரத்னா விருது அறிவிப்புக்குப் பிறகு நான் பேசவில்லை. என்ன நடக்கிறதோ அது உங்கள் மூலம் தெரிகிறது. உங்கள் மூலம்தான் நான் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டார்.

The post பாரத ரத்னாவில் இத்தனை அரசியலா? தாத்தாவுக்கு விருது கொடுத்து பேரனை தட்டி தூக்கிய பா.ஜ appeared first on Dinakaran.

Tags : Bharat Ratna ,B.J. ,India Alliance ,BJP ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Karpuri Thakur ,
× RELATED I.N.D.I.A. கூட்டணி மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமர் மோடி