×

மதராசாவை இடிக்க முயன்றதால் உத்தரகாண்ட்டில் கலவரம் 6 பேர் பலி; 250 பேர் காயம்

ஹல்த்வானி: உத்தரகாண்ட் மதராசாவை இடிக்க முயன்றதால் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் பலியாகி விட்டனர். 250 பேர் படுகாயம் அடைந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதரசாவை நீதிமன்ற உத்தரவுபடி நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் அகற்றும் பணியில் ஈடுபட்டது. புல்டோசர் மூலம் வழிபாட்டு தலம் இடிக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த சிலர் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் காவல் நிலைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர். திடீரென ஏற்பட்ட வன்முறை சம்பவத்தால், ஏராளமான போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். வன்முறையாளர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இருந்தும் நிலைமை கட்டுக்குள் வராததால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.

ஹல்த்வானியில் ஏற்பட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டது. வன்முறை தாக்குதலில் தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை வாகனங்கள் சேதமடைந்தன. நேற்றுமுன்தினம் மாலை முதல் இரவு வரை நடந்த சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டது. இதில் 6 பேர் பலியாகி விட்டனர். உத்தரகாண்ட் டிஜிபி அபினவ் குமார் கூறும்போது, ‘‘கலவர பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து விட்டது. தவறு செய்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்’ என்றார்.

மாநிலங்களவையில் காரசார விவாதம்
ஹல்த்வானியில் நடந்த கலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் காரசார விவாதம் நடந்தது. பாஜ எம்பி ஹர்நாத் யாதவ் பேசும் போது,’ ஹல்த்வானியில் நடந்த சம்பவம் ஒரு சதி. வெடிகுண்டுகள், நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் தாக்கப்பட்டனர். கலவரக்காரர்களை சுட உத்தரவிட வேண்டும். அவர்களிடம் மென்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. உத்தரகாண்ட் அரசு ஒவ்வொரு வீடாக சோதனை செய்து, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

அப்போது சிவசேனா உத்தவ் பிரிவு எம்பி பிரியங்கா சதுர்வேதி, ‘பாஜவின் பிரித்தாளும் கொள்கையால் அங்கு கலவரம் வெடித்தது. மக்களை பிளவுபடுத்தும் போது இதுதான் நடக்கும். மணிப்பூரில் நடக்கும் சம்பவங்களைப் பாருங்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குகளுக்காக பிளவுபடுத்தும் செயல்களால் பலனடையும் சூழ்நிலையை பாஜ உருவாக்கியுள்ளது. இதை உள்துறை அமைச்சர் கவனத்தில் கொள்வார் என்று நான் நம்புகிறேன். போலீசார் தாக்கப்பட்டிருந்தால் அது வெட்கக்கேடானது. இது பாஜ ஆளும் மாநிலங்களில் எப்படி குண்டர்த்தனம் நிலவுகிறது என்பதை காட்டுகிறது’ என்றார். இதே போல் எம்பிக்கள் பிரிஜ்லால், அசோக் பாஜ்பாய், தினேஷ் சர்மா ஆகியோர் காரசாரமாக விவாதித்தனர்.

The post மதராசாவை இடிக்க முயன்றதால் உத்தரகாண்ட்டில் கலவரம் 6 பேர் பலி; 250 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Haldwani ,Haldwani, Uttarakhand ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ