×

முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா: தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் கவுரவம்; பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், பி.வி. நரசிம்மராவ், தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். முன்னாள் பிரதமர்கள் சரண் சிங் சவுத்திரி, பி.வி.நரசிம்மராவ் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இந்தத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட இருப்பது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பில், ‘முன்னாள் பிரதமர் சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது நமது அரசின் அதிர்ஷ்டம். நாட்டுக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புக்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது முழு வாழ்க்கையையும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காக அர்ப்பணித்தவர். உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தாலும் சரி, உள்துறை அமைச்சராக இருந்தாலும் சரி, எம்எல்ஏவாக இருந்தாலும், தேசத்தைக் கட்டியெழுப்ப சரண் சிங் எப்போதும் உத்வேகம் அளித்தார். அவசரநிலைக்கு எதிராகவும் உறுதியாக நின்றார்.

நமது விவசாய சகோதர, சகோதரிகளுக்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பும், நெருக்கடி நிலையின்போது ஜனநாயகத்துக்கான அவரது அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இதபோல் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது குறித்த அறிவிப்பில், ‘நமது முன்னாள் பிரதமர்பி.வி.நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும். ஒரு சிறந்த அறிஞராகவும், அரசியல் தலைவராகவும் இருந்து பல்வேறு பதவிகளின் மூலம் நாட்டிற்காக அவர் பணிபுரிந்தார்.

ஆந்திரப் பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் என ஒவ்வொரு பணியின் மூலமும் நரசிம்ம ராவ் சமமாக நினைவுகூரப்படுகிறார். இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற அவரது தலைமை முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை அவர் அமைத்தார். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலம், பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை வளர்த்தது.
மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித் துறைகளில் அவர் வழங்கிய பங்களிப்புகள் மகத்தானவை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை செழுமைப்படுத்திய ஒரு தலைவராக நரசிம்ம ராவ் திகழ்ந்தார்’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்க இருப்பது குறித்த அறிவிப்பில் பிரதமர் மோடி, ‘விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. சவாலான காலங்களில் இந்தியா விவசாயத்தில் தன்னிறைவை அடைய உதவுவதில் எம்.எஸ்.சுவாமிநாதன் முக்கியப் பங்கு வகித்தார். மேலும், இந்திய விவசாயத்தை நவீனமயமாக்குவதில் சிறந்த முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

கண்டுபிடிப்பாளராக, வழிகாட்டியாக, ஏராளமான மாணவர்களிடம் கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவித்தவராக திகழ்ந்த அவரது விலைமதிப்பற்ற பணியை நாங்கள் அங்கீகரிக்கிறோம். டாக்டர் சுவாமிநாதனின் தொலைநோக்கு தலைமை இந்திய விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் செழுமையையும் உறுதி செய்துள்ளது. நான் நெருக்கமாக அறிந்த சிலரில் அவரும் ஒருவர். அவருடைய நுண்ணறிவையும், சேவையையும் நான் எப்போதும் மதிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஒரே ஆண்டில் 5 பேருக்கு விருது
* பீகார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு சில நாட்களுக்கு முன்பு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இப்போது சரண்சிங், பிவி நரசிம்மராவ், எம்எஸ் சுவாமிநாதனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
* 1999ல் அதிகபட்சமாக 4 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடத்தில் அறிவிக்கப்பட்ட அதிகபட்ச விருது இதுவாகும்.
* பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட சரண் சிங் 1987ல் இறந்தார். நரசிம்மராவ் 2004ல் மறைந்தார். எம்எஸ் சுவாமிநாதன் கடந்த ஆண்டு காலமானார்.
* இந்த ஆண்டு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட 5 பேரில் 96 வயதான அத்வானி மட்டும் உயிருடன் உள்ளார்.
* மொத்தம் 53 பேர் பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர். கடைசியாக 2019ல் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு விருது வழங்கப்பட்டது. 2020 முதல் 2023 வரை யாருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

* சோனியா வரவேற்பு
முன்னாள் பிரதமர்கள் பிவி நரசிம்மராவ், சரண் சிங் மற்றும் பசுமைப் புரட்சியின் முன்னோடி எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டதை காங்கிரஸ் வரவேற்றது. இதுபற்றி நாடாளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவிடம் கேட்ட போது,’ நான் வரவேற்கிறேன்’ என்றார்.

* கன்ஷிராமை மறந்துட்டீங்களே..
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில்,’ பாஜ அரசால் பாரத ரத்னா விருது பெற்ற அனைத்து பிரமுகர்களும் வரவேற்கப்படுகிறார்கள். ஆனால் இந்த விஷயத்தில், குறிப்பாக தலித் பிரமுகர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் ஏற்புடையதல்ல. இதன் மீதும் கவனம் செலுத்துங்கள். நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு, பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கி கவுரவித்தது வி.பி. சிங் அரசு. அதன்பிறகு, கன்ஷிராம் புறக்கணிக்கப்படுகிறார். ஒன்றிய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றார்.

The post முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா: தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கும் கவுரவம்; பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Prime Ministers ,Saranching ,Tamil Nadu ,M. S. ,Swami Nadhan ,Modi ,New Delhi ,Former ,Prime Ministers Saranching ,P. V. Narasimmarao ,Saran Singh Chowtri ,M. S. Swaminathan ,Narasimmara ,Tamil ,Nadu ,Agronomist ,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...