×

மும்பை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் வசதிகள் குறித்து விளக்கம்

மும்பை: ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் ஓடிஎம் பயண சந்தை (ஓவர்சீஸ் டிராவல் மார்ட்) கண்காட்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளாச்சிக் கழக அலுவலர்கள் பயண முகவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கான வசதிகள் குறித்து விளக்கம் தெரிவித்தார்கள்.

சுற்றுலா அன்னிய செலாவணியை அதிகம் ஈட்டுகின்ற துறையாக திகழ்கின்றது. உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிப்பதற்காகவும், பொழுது போக்கவும் பல்வேறு உலக நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். பல்வேறு நாடுகளில் ஆண்டு முழுவதும் தாங்கள் ஈட்டுகின்ற சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து, தாங்கள் விரும்புகின்ற நாடுகளில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு அந்த நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரிய இடங்கள், மத வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு உலக அறிவை வளர்த்துக் கொண்டு மன மகிழ்ச்சியான வாழ்க்கை மேற்கொள்கின்றார்கள்.

தற்போது விளையாட்டுகள் உலக அளவில் அதிகம் நடைபெறுவதாலும், வெளிநாடுகளில் நிறுவனங்களை அமைத்துள்ள நிறுவனங்கள் தங்கள் வணிக பயன்பாட்டிற்காக மாநாடுகள் நடத்தவும், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்வதன் காரணமாக சுற்றுலாத்துறையானது பல்வேறு வகைகளில் வளர்ந்து வருகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது, இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, சர்வதேச அலைச்சறுக்கு போட்டி உள்ளிட்ட போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் உலகளவில் முக்கியத்துவம் பெற்று வெளிநாட்டவர்களால் அதிக அளவில் பார்வையிடப்படும் சுற்றுலாத்தலமாக தற்போது விளங்கி வருகின்றது.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை வெளிநாட்டு மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா, சர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னை திருவிழா, மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களை நடத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான சுற்றுலாத்தலங்கள், கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் குறித்த கழுகுக்கண் பார்வை (TOP ANGLE VIEW) அனுபவத்தையும், சுற்றுலா பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டதைப் போன்ற அனுபவங்களையும் தரும் வகையிலான குறும்படங்கள் உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகளை எளிதில் சென்றடையும் வகையில் யூடியூப், பேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் பங்கு பெறும் இந்திய அளவிலான பயண சுற்றுலா சந்தைகள், வெளிநாடுகளில் நடைபெறும் பயண சுற்றுலா சந்தைகள் மற்றும் சுற்றுலா கண்காட்சிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கம் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகளை தெரிவிக்கும் குறும்படங்கள் திரையிடப்பட்டும், புத்தகங்கள், சிறு கையேடுகள் ஆகியவை பயண ஏற்பாட்டாளர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாத்துறையினர், பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டும் கவன ஈர்ப்பு செய்யப்படுகின்றது.

மும்பை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் 8.2.2024 தொடங்கி 10.2.2024 வரை நடைபெற்று வரும் ஓடிஎம் பயண சந்தை (ஓவர்சீஸ் டிராவல் மார்ட்) கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளாச்சிக் கழக அலுவலர்கள் பயண முகவர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் தமிழ்நாட்டில் சுற்றுலா மேற்கொள்வதற்கான வசதிகள் குறித்து விளக்கம் தெரிவித்தார்கள்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் புகழ்பெற்ற ஊட்டி மலை ரயில், மதுரை ஆயிரம் கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பயண சந்தையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கில் மும்பை சுற்றுலா அலுவலர் .ந.மாதவன், தலைமை அலுவலக கணக்கு அலுவலர் ஜாகீர் உசைன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக உதவி இயக்குநர் (மக்கள் தொடர்பு) சி.சீனிவாசன், உதவி சுற்றுலா அலுவலர்கள் த.செல்வராஜூ, து.பாபு உள்பட சுற்றுலா முகவர்கள், பயண முகவர்கள், ஓட்டல்தாரர்கள் பங்கேற்றனர்.

ஒ.டி.எம் பயண சந்தையில் 50 வெளிநாட்டு அரங்கங்களும், 28 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த அரங்கங்களும், தனியார் அரங்கங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த அரங்கத்தை தினந்தோறும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு, தமிழ்நாட்டின் சிறப்புகளை அறிந்தனர். கண்காட்சியின் தரை தளத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்த அரங்கங்கள் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலின் இரண்டாவது அரங்கமாக தமிழ்நாட்டின் அரங்கம் அமைந்தது பார்வையாளர்களை அதிகம் கவர்ந்த்து.

The post மும்பை ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியில் தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களின் வசதிகள் குறித்து விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mumbai GEO World Convention Centre ,MUMBAI ,NADU ,CLUB ,OTM TRAVEL MARKET ,TRAVEL MART ,GEO WORLD CONVENTION CENTRE ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...