×

மாமல்லபுரத்தில் போலீசார் வாகன தணிக்கை ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே ஓஎம்ஆர் சாலையில் நேற்று மாலை போலீசாரின் தீவிர வாகன தணிக்கையின்போது, அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மாமல்லபுரம், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலை வழியாக சுலபமாக தப்பித்து செல்கின்றனர். மேலும், பாண்டிச்சேரியில் இருந்து பைக், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் போலீசாருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களையும் கடத்தி வருகின்றனர் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்பி சாய்பிரணீத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலை பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் செங்கல்பட்டு உட்கோட்டம், மாமல்லபுரம் உட்கோட்டம், மதுராந்தகம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் காவல்நிலைய எஸ்ஐக்கள் தலைமையில் நாள்தோறும் போலீசார் ஆங்காங்கே சுழற்சி முறையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை மாமல்லபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பூஞ்சேரி சந்திப்பில் இருந்து திருப்போரூர் செல்லும் ஓஎம்ஆர் சாலையில் சிறப்பு எஸ்ஐ கருணாநிதி தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், பைக்கை அதிவேகமாக ஓட்டி வந்தவர்கள், மதுபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தவர்களை வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். மேலும், லைசென்ஸ் மற்றும் ஆர்சிபுக் இல்லாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்து அனுப்பினர். ஓஎம்ஆர் சாலை பகுதியில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபடுவதை பார்த்ததும், தங்களின் இருசக்கர வாகனங்களை ஒருசிலர் தூரத்திலேயே நிறுத்தி, கரடுமுரடான மாற்றுப் பாதையில் திரும்பி சென்றனர் எனக் குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரத்தில் போலீசார் வாகன தணிக்கை ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,OMR Road ,Maduraandkam ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில்...