×

கொடநாட்டில் கொலை நடந்த இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: எதிர்தரப்பு மனுதாக்கல்: விசாரணை ஒத்திவைப்பு

ஊட்டி: கொடநாட்டில் கொலை நடந்த இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்தரப்பு சார்பில் இன்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இங்கு நடந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இவ்வழக்கு விசாரணை இன்று வந்தது. குற்றவாளி வாளையார் மனோஜ் ஆஜராகி இருந்தார். விசாரணை மேற்கொண்ட நீதிபதி அப்துல் காதர் இவ்வழக்கின் விசாரணையை வருகிற 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு வக்கீல் ஷாஜகான் கூறுகையில், ‘இந்த வழக்கில் தற்போது நிலை குறித்து நீதிபதி கேட்டறிந்தார். குற்றவாளிகளின் செல்போன் தொடர்பான உடையாடல் அடங்கிய விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும் எதிர்தரப்பில் இருந்து இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறீர்களா என்று கேட்டனர். இல்லை என கூறினோம்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்’ என்றார்.இவ்வழக்கு தொடர்பாக வக்கீல் விஜயன் கூறுகையில், ‘கொடநாட்டில் கொலை நடந்த இடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கொடநாடு கொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளோம். அந்த மனுவுக்கு எதிராக மனுதாக்கல் செய்ய வரும் 23ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post கொடநாட்டில் கொலை நடந்த இடத்தில் நீதிமன்ற அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்: எதிர்தரப்பு மனுதாக்கல்: விசாரணை ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Khodanad ,Nilgiri district ,Kotagiri ,Kodanadu ,Dinakaran ,
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...