×

கடவூர், தோகைமலை பகுதிகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை துவக்கம்

தோகைமலை : கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சாகுபடி செய்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை தொடங்கி உள்ளது.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள் தற்போது அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர். கடந்த சில வருடங்களாக பருவமழை குறைந்ததால், விவசாயிகள் குறிப்பிட்ட பருவத்திற்குள் விவசாயம் செய்ய முடியாமலும், சாகுபடி செய்த பயிர்களை அறுவடை செய்ய முடியாமல் தவித்ததனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை தொடர்ந்து கணிசமாக பொழிந்து வருகிறது. இதனால் கடவூர் மற்றும் தோகைமலை பகுதியில் உள்ள கிணற்று பாசன விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இதேபோல் பரவலான விவசாயிகள் தங்களது வயல்களில் சக்கரைவள்ளி சாகுபடி செய்வதி ஆர்வம் காட்டி வருகின்றனர்.சர்க்கரைவள்ளிக்கிழங்கு நடவு செய்யப்பட்ட கொடிகள் 90 முதல் 110 நாட்களுக்குள் கிழங்கு முதிர்ச்சியடைந்து அறுவடைக்கு வரும்.

அடி உரமாக கால்நடைகளின் எருக்களை இடும் விவசாயிகள் 70ம் நாளில் அதிக மகசூல்பெற யூரியா உரம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாகுபடியில் அதிகமான நோய் தாக்கங்கள் இருக்காது என்றும் பச்சை பூச்சிகளின் தாக்கம் வந்தால் தனியார் மருந்து கடைகளில் இதற்கான மருந்துகளை பெற்று தெளித்தால் சரியாகிவிடும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

சாகுபடியின்போது ஒன்று முதல் 2 முறை மட்டுமே களை எடுத்து, வாரம் ஒருமுறை தண்ணீர் இட வேண்டும் என்கின்றனர். முறையாக பராமரித்து வந்தால் அறுவடை காலங்களில் ஒரு ஏக்ககருக்கு 7 முதல் 10 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று தெரிவிக்கின்றனர்.கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதியில் சாகுபடி செய்யப்படும் சர்க்கரைவள்ளிக் கிழங்கானது, அறுவடைக்கு பின்பு கரூர், திருச்சி, திண்டுக்கல் போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர்.

குறிப்பாக ஒட்டன்சத்திரம், திருச்சி போன்ற சந்தைகளில் கடந்த ஆண்டு ஒரு கிலோ சிகப்புரக சர்க்கரைவள்ளி கிழங்கு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையும், வெள்ளை ரக கிழங்கு ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது.இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பெற்று செல்வதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டு விலை ஏற்றமடையும் என்ற நம்பிக்கையில் பல இடங்களில்; சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாகுபடிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.இந்நிலையில் தற்போது அறுவடை பணிகளை தொடங்கி உள்ளனர்.

The post கடவூர், தோகைமலை பகுதிகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு அறுவடை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Kadavur ,Tokaimalai ,Thokaimalai ,Karur district ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...